ஜோகூர் பாரு: ஜோகூரின் தாமான் செத்தியா இண்டாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஜனவரி 8ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பழிக்குப் பழி காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.
உணவகம் ஒன்றில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் 40 வயது ஆடவர் சுடப்பட்டார். மிகவும் அருகில் இருந்து நெஞ்சில் சுட்டதில் அவர் உயிரிழந்தார். சுட்டவரும் சுடப்பட்டவரும் வெவ்வேறு குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தக் கொலை, இரண்டு தலைமறைவுக் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றங்களுடன் தொடர்புடையது என்றும் அந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு மார்ச் 30ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
மேலும் ஒருவர் அல்லது இருவர் தேடப்பட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி வியாழக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தது.
“அந்தச் சம்பவம் தலைமறைவுக் கும்பல்கள் சம்பந்தப்பட்டது. கொலையின் பின்னணியில் பழிவாங்கும் நோக்கம் இருந்ததாக காவல்துறை நம்புகிறது,” என்று திரு குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை விசாரிக்க புக்கிட் அமான் காவல்துறையினரை உள்ளடக்கிய சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 8ஆம் தேதியும் 17ஆம் தேதியும் குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமடைந்தது.
அதில் ஒரு பகுதியாக, மார்ச் 8ஆம் தேதி 64 வயது மலேசியரை காவல்துறை சுட்டுக் கொன்றது. கொலைச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அவர் என்று பின்னர் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தேடுதல் வேட்டையின்போது இரண்டு கைத்துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள்களைக் காவல்துறைக் கைப்பற்றியது.