காபூல்: வடகிழக்கு ஆப்கானிஸ்தான்மீது பாகிஸ்தான் நடத்திய ஆகாயப்படைத் தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் ஓரளவு அமைதி நிலவியதைத் தொடர்ந்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அவ்விரு அண்டை நாடுகளுக்குமிடையே மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொடரும் கசப்பான உறவு
முன்பு பங்காளிகளாக இருந்த ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மோசமாக இருந்துவந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாதப் போக்கின் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே பூசல் இருந்துவருகிறது. ஆப்கானிய எல்லைப் பகுதிகளிலிருந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளைக் காபூல் தங்கள் நாட்டில் தங்க வைத்துக்கொள்வதாக இஸ்லாமாபாத் குற்றஞ்சாட்டுகிறது. அக்குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று குறைகூறுகிறது.
திங்கட்கிழமை நடந்த தாக்குதல்
திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நடத்தப்பட்ட ஆகாயப்படைத் தாக்குதல் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையம் ஒன்று தாக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இடம்பெற்றது. அந்தத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
ஆக அண்மைய தாக்குதலில் குனார் மாநிலத்தில் குறைந்தது ஒரு வீடு தாக்கப்பட்டது. அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் காயமடைந்ததாக தலிபான் துணைப் பேச்சாளர் ஹம்துல்லா ஃபிட்ராட் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
“பட்டிக்காவின் (மாநிலம்) பர்மால் மாவட்டத்தில் இரண்டு இடங்கள்மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஒரு கடையும் யாரும் வசிக்காத ஒரு வீடும் அழிந்துபோயின. யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை,” என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு பாகிஸ்தானின் ராணுவம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ஜூலையில் நிகழ்ந்த சம்பவம்
கடந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்மீது வானூர்திகளைப் பாய்ச்சியது. அந்த வானூர்திகளைத் தாங்கள் முறியடித்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்லாமாபாத் சொன்னது.
இருதரப்புக்கும் இடையிலான ஆக மோசமான சம்பவம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்தது. காபூல்மீது பாகிஸ்தான் நடத்திய ஆகாயப்படைத் தாக்குதலில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல், ஒரு போதைப்புழங்கி மறுவாழ்வு நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக தலிபான் தெரிவித்தது.
