தன்னுயிரைக் கொடுத்து மகனைக் காத்த தந்தை

தன்னுயிரைக் கொடுத்து மகனைக் காத்த தந்தை

1 mins read
9e971aaf-bdd5-4cba-9ced-431b447a6147
மூழ்கிய ஆடவரின் உடலைத் தேடும் பணியில் தேடி மீட்கும் படையினர். படம்: மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை -

ஆற்றில் பாய்ந்து மூழ்கிய காரில் சிக்கிய ஐந்து வயது மகனைக் காப்பாற்றியபின் 40 வயது ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் மலேசியாவின் சாபா மாநிலத்தில் நிகழ்ந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் கம்புங் இம்பகனில் கரையோரமாக நின்றபடி ஆற்ரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார் திரு லசிபி லவாதிகு.

அருகிலேயே தமது காரை நிறுத்தியிருந்தார் திரு லசிபி. அதற்குள் அவரது ஐந்து வயது மகன் இருந்தான்.

இந்நிலையில், இயக்கநிலையிலேயே இருந்த கார் திடீரெனக் கிளம்பி, ஆற்றுக்குள் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரு லசிபி, துளியும் தாமதிக்காது ஆற்றுக்குள் குதித்தார்.

"எப்படியோ காரிலிருந்த தம் மகனை திரு லசிபி மீட்டுவிட்டார். அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இன்னொருவரும் சிறுவனை மீட்க உதவினார். ஆனால், திரு லசிபி நீருக்குள் மூழ்கிவிட்டார்," என்று பெனம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகம்மது ஹாரிஸ் இப்ராகிம் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக குவீன் எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.

இதனிடையே, ஆளில்லா வானூர்தியின் துணையுடன் தேடி மீட்கும் படையினர் மறுநாள் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் ஆற்றிலிருந்து திரு லசிபியின் உடலை மீட்டனர்.

மகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கே உடற்கூறாய்விற்காக திரு லசிபியின் உடலும் எடுத்துச்செல்லப்பட்டது.