சோல்: தென்கொரியாவில் வார இறுதியின்போது நிகழ்ந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் மாண்டதோடு அவரது தந்தை கைது செய்யப்பட்டார். மேலும் வெடிகுண்டைக் கண்டுபிடிக்கும் பிரிவு சோலில் உள்ள குடியிருப்புக் கட்டடத்திலிருந்த பலரை வெளியேற்றியது.
சொங்டோ அனைத்துலக நகரில் உள்ள உயர் மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஆடவர் ஒருவர் மகனைத் துப்பாக்கியால் சுட்டதாக ஜூலை 20ஆம் தேதி இஞ்சியோன் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு வந்தது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட 30 வயதுடைய ஆடவர் ஒருவர் பின் மாண்டதாக இஞ்சியோன் இயொன்சு காவல் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மாண்ட ஆடவரின் தந்தை என்று நம்பப்படும் 60 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆடவர், வீட்டில் செய்த துப்பாக்கியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவர் அந்தத் துப்பாகியை வைத்து தமது மகனைச் சுட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சோல் காவல்துறை அதிகாரிகள் மூன்று மணிநேர தேடலுக்குப் பின் ஜூலை 21ஆம் தேதி சம்பவ இடத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கங்னம் வட்டாரத்தில் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
வட சோலில் உள்ள டோபொங்கில் உள்ள தமது இல்லத்தில் வெடிபொருள்களையும் வைத்திருப்பதாக விசாரணையின்போது ஆடவர் அதிகாரிகளிடம் சொன்னார்.
அதையடுத்து கட்டடத்திலிருந்து 105 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் வீட்டில் செய்த வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக அகற்றினர்.

