சோல்: தென்கொரியா தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குக் கூடுதல் தொகை அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு செப்டம்பர் 27ஆம் தேதி தெரிவித்துள்ளது.
இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 டிரில்லியன் வோன் (9.7 பில்லியன் வெள்ளி) சுகாதாரக் காப்பீட்டு நிதி பயன்படுத்தப்படும் என்று அது கூறியது.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் தென்கொரியச் சுகாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பெரிய பொது மருத்துவமனைகள் தீவிர நோய்கள், அரிய வகை நோய்கள், அவசரநிலை ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த இந்த நடவடிக்கை ஊக்குவிக்கும்.
பயிற்சி மருத்துவர்களைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சு கூறியது.
கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சி மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர், மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனால் அவசர சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளை மருத்துவமனைகள் திருப்பி அனுப்ப நேரிட்டது. மருத்துவமனைகள் குறைவான நேரமே செயல்பட்டன. பணியில் இருந்த மருத்துவர்களின் வேலைப்பளு கூடியது.
அதையடுத்து, தென்கொரிய அரசாங்கம் இந்நிலையைக் கையாளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

