ஜோகூர்பாரு: சிங்கப்பூரில் போதைப்பொருள் சார்ந்த குற்றம்புரிந்து இங்குள்ள காவல்துறையால் தேடப்பட்டுவந்த ஆடவர் மலேசியாவில் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்துவந்தார்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் அவரை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அழைத்துச் சென்ற குற்றக்கும்பல் பிறகு அவரை அங்கேயே கடத்திவைத்து பிணைத்தொகையைக் கேட்டு அவரது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தது.
அந்த 33 வயது சிங்கப்பூர் ஆடவரை குற்றக் கும்பலிடமிருந்து மீட்ட மலேசியக் காவல்துறை கடத்தல் சம்பவத்தின் விவரங்களை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்டது. அந்த ஆடவருடன் அவரது 28 வயது காதலியும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டார்.
காவல்துறை ஒரு பெண் உட்பட ஆறு உள்ளூர் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து பிணைத்தொகை உட்பட S$82,620 (மலேசிய ரிங்கிட் 264,440) மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று புக்கிட் அமான் காவல்துறையின் குற்றவியல் பிரிவு இயக்குநர் எம். குமார் புதன்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில் கடத்தல்காரர்களில் ஒருவர் அந்த ஆடவரை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் மே மாதம் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவியுள்ளார் என்று அறியப்பட்டது.
அந்த ஆடவரின் காதலி முறையாக மலேசியாவுக்குள் வந்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு வந்த காதலர் இருவரையும் சில நாள்களுக்கு முன் கடத்தல் கும்பல் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பிணைக் கைதிகளாக்கிக் கொண்டனர். அந்த ஆடவரின் தாயாருக்கு பிணைப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தாயார் காவல்துறையில் திங்கட்கிழமை புகார் அளித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணியளவில் ஒரு பேரங்காடியில் சிறப்புக் காவல்படை குற்றவாளிகளையும் கடத்தப்பட்ட தம்பதியையும் கண்டுபிடித்தனர் என்று திரு குமார் தெரிவித்தார்.


