வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஊசி மூலம் விஷம் செலுத்தப்பட்ட பெண், தொடர்ந்து மூச்சுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட கிறிடா பைக் என்ற பெண்ணுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 1) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளில் பெண் ஒருவருக்கு விஷ ஊசியின் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை.
அந்த வகையில், பென்டொபார்பிட்டல் கொண்ட ஊசி, பைக்கின் உடலில் இரண்டு முறை செலுத்தப்பட்டது. மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பைக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்குப் பைக்கிற்கான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைச் செய்தியாளர்காள், சாட்சிகள் ஆகியோர் நேரில் பார்க்க திரண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்ததுபோல நிகழவில்லை என்றார் செய்தியாளர் ஒருவர்.
இதற்கிடையே, இளம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்த வாதத்தைப் பைக்கின் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
இளையருக்கான வேலைப் பயிற்சி முகாம் ஒன்றில் கொலீன் ஸ்லெமர் என்ற 19 வயது இளையரைப் பைக்கும் அவரது காதலனும் அடித்துக்கொன்றனர். அப்போது பைக்கிற்கு 18 வயது.
பைக்கின் வயதையும் மனநலப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு கருணை காட்டும்படி அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுமுதல் இதுவரை 18 பெண்களுக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மரண தண்டனை தகவல் மையம் தெரிவித்தது.
