மியன்மாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் கைதிகள்: மனித உரிமைகள் அமைப்பு

மியன்மாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் கைதிகள்: மனித உரிமைகள் அமைப்பு

சித்திரிப்புப் படம்: அன்ஸ்பிளாஷ்

23 Sep 2026 - 7:18 pm

2 mins read

நேப்பிடாவ்: மியன்மாரில் உள்ள பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமை, மருத்துவப் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு ஆளாவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு புதன்கிழமை (செப்டம்பர் 23) தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் சந்திக்கும் தொடர் கொடுமைகளை அந்த அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிலிருந்து, மியன்மாரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால், அந்நாட்டின் பெருவாரியான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட, 100,000 பேர் உயிரிழந்ததோடு, 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட 30,000க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளில், முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி உட்பட 6,600க்கும் அதிகமான பெண்களும், 640 குழந்தைகளும் அடங்குவர் என நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பெண்கள் விவரித்த சிறை நடைமுறைகள், கடுமையான துன்புறுத்தல்களும் புறக்கணிப்புகளும் திட்டமிட்டு வழக்கமாக நடத்தப்படுவதை உணர்த்துவதாக அவ்வமைப்பின் ஆசிய வட்டாரத்திற்கான துணை இயக்குநர் பிரியோனி லாவ் தெரிவித்துள்ளார்.

தீக்காயம், மின்சார அதிர்ச்சி

சில கைதிகளைத் தடிகள், சங்கிலிகள், உலோகக் குழாய்கள் ஆகியவற்றைக் கொண்டு சிறை அதிகாரிகள் அடித்ததாகவும் சிலர் மின்சார அதிர்ச்சி, சிகரெட் தீக்காயங்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள், நிவாரண ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட 17 முன்னாள் பெண் கைதிகளிடம் 2025, 2026ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவன விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையும் இத்தகைய சித்திரவதைகளை உறுதிப்படுத்தியது.

கடுமையான நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சையைச் சிறை அதிகாரிகள் திட்டமிட்டுத் தடுப்பதாகவும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டு அவர்கள் சிறை அறைகளுக்குள்ளேயே பிரசவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் முன்னாள் கைதிகள் தெரிவித்தனர்.

மியன்மாரில் ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு, 18 முதல் 35 வயதிற்குட்பட்ட குறைந்தது 74 அரசியல் கைதிகள் போதிய மருத்துவச் சிகிச்சை கிடைக்காததாலும் கடுமையான விசாரணைகளாலும் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்கைதிசிறைபெண்கள்கொடுமை