இங்கிலிஷ் காற்பந்து லீக் தொடரில் மே 3ஆம் தேதியன்று நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் குழுக்களுக்கிடையிலான ஆட்டத்தை நேரடியாகக் காண ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்துக்குச் சிங்கப்பூரிலிருந்து சென்ற மேன்யூ ரசிகர்கள் குழுவில் நானும் ஒருவன்.
ஆட்டத்தின் அடுத்த நாளான மே 4ஆம் தேதியன்று, எங்கள் பயணத்தின் ஏற்பாட்டு நிறுவனமான ‘மேட்ச்டே அஃபேர்ஸ்’, ஓர் உணவகத்தில் முன்னாள் மேன்யூ ஆட்டக்காரர் வெஸ் பிரவுனைச் சந்திக்க ஒரு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. 1.85 மீட்டர் உயரமுள்ள பிரவுன், 46 வயதிலும் நேர்த்தியான உடற்கட்டுடன் காட்சியளித்தார். அவருக்காகக் காத்திருந்த எங்களுடன் கைகுலுக்கி, “ஓல்ட் டிராஃபர்ட்டுக்கு வந்தமைக்கு நன்றி,” என்று கூறி அன்புடன் வரவேற்றார்.
தற்காப்பு ஆட்டக்காரரான பிரவுன் 1996 முதல் 2011 வரை மேன்யூவிற்காக விளையாடினார். அப்போதைய மேன்யூ நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசனால் ‘சிறந்த தற்காப்பு வீரர்’ எனப் பாராட்டு பெற்ற இவர், பின்னர் சண்டர்லேண்ட், பிளாக்பர்ன் குழுக்களுக்காகவும் விளையாடினார். இந்திய சூப்பர் லீக்கின் (ஐஎஸ்எல்) 2017-18 பருவத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் குழுவிற்காகவும் இவர் விளையாடினார்.
மேன்யூவின் புதிய நிர்வாகி மைக்கல் கேரிக்கின்கீழ், மான்செஸ்டர் யுனைடெட் குழு இந்தப் பருவத்தின் நடுப்பகுதியிலிருந்து ஒரு வியத்தகு மாற்றத்தைக் கண்டுவந்துள்ளது. பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி, 2026/27 யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான தகுதியையும் உறுதிசெய்துள்ளது.
மைக்கல் கேரிக் ஏற்படுத்திய மாற்றம்
நிர்வாகிப் பதவியிலிருந்து ரூபன் அமோரிம் நீக்கப்பட, 2026 ஜனவரி 13ஆம் தேதி முதல் பொறுப்பேற்றதிலிருந்து, குழுவிற்குப் புத்துயிர் ஊட்டியுள்ளார் மைக்கல் கேரிக். அவரது இந்தச் சாதனை பற்றி பிரவுனிடம் கேட்டபோது, “முதலில், அவர் திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மேலும், அப்போது நாங்கள் எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம் என்று பார்த்தால், ஒரு பெரிய வித்தியாசம், ஒரு பெரிய மாற்றம் தெரிகிறது. அவர் மேன்யூ காற்பந்துக் குழுவிற்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன்.
“வீரர்கள் நிச்சயமாக அவருக்காக உழைப்பதையும், அவர்கள் கொடுக்கும் முயற்சியையும் நீங்கள் பார்க்கலாம். மேன்யூ அவ்வளவு சிறப்பாக விளையாடாதபோதும்கூட, அந்த முயற்சி, ஓட்டம், போராட்டம் ஆகியவை இருக்கின்றன. எல்லாரும் முயற்சி செய்வதை நீங்கள் பார்க்கலாம். அதன் விளைவாக, அணிக்கு நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. சில சமயங்களில், நாங்கள் மிகவும் சிறந்த முறையில் விளையாடி வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். எதிர்த்தாக்குதல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.
“சில சமயங்களில் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களை மாற்ற வேண்டியிருந்தாலும், மைக்கல் தான் களமிறக்க விரும்பும் வீரர்களைத் தீர்மானித்து விடுகிறார். பின்னர், வெளிப்படையாக, ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் அவ்வப்போது உள்ளே வரக்கூடும். ஆனால், அது அணிக்கு ஒரு நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது என்று நான் நினைக்கிறேன். மேலும், அதன் மூலம் அவர் நல்ல பலன்களையும் பெறுகிறார். குழுவின் தலைவர் புருனோவுக்கு அந்த வகையான முழு சுதந்திரம் இருப்பது, வெளிப்படையாக, மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், கோபி மேனுவை மீண்டும் கொண்டுவந்ததும் ஒரு நல்ல விஷயம். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அமோரிமின்கீழ் குழு தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு ஓர் ஆட்டத்தில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது,” என்று விவரித்தார் பிரவுன்.
“மேனு இப்போதுதான் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதனால் எல்லாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும், மைக்கல் பொறுப்பேற்றபோது இந்த நேரத்தில் குழு நான்காம் இடத்திற்கு முன்னேறும் என்று யாராவது சொல்லியிருப்பார்களா என்று நான் நினைக்கவில்லை. அது நடக்கக்கூடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால், அவரால் அதைச் செய்ய முடிந்துள்ளது. முக்கியமானதாக நான் நினைப்பது என்னவெனில், வீரர்கள் அவருக்கும் அவர் கொண்டுவந்த பயிற்றுவிப்பு அதிகாரிகளுக்கும் செவிசாய்த்து நடக்கின்றனர். ஜானி, ஜோனத்தன் வுட்கேட், ஸ்டீவ் ஹாலண்ட் போன்றோர் ஒரு மகத்தான வேலையைச் செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“பயிற்சியின்போதும்கூட மனரீதியில் எல்லாரும் இன்னும் கொஞ்சம் நிம்மதியாகவும் நிதானமாகவும் இருக்கிறார்கள். இதுவே முடிவன்று. ஆனால், ஜனவரியில் நாம் இருந்த இடத்திலிருந்து பார்க்கையில், இந்தப் பருவத்தின் முக்கிய நோக்கம் சாம்பியன்ஸ் லீக்கிற்குள் நுழைவதுதான் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
நிர்வாகி கேரிக் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறிய பிரவுனிடம், “முன்னாள் நிர்வாகி ரூபன் அமோரிம் இதே குழுவைத்தான் கையாண்டார். அமோரிம் பயன்படுத்திக்கொள்ளாத, ஆனால் கேரிக் பயன்படுத்திக்கொண்ட அந்த விடுபட்ட அம்சம் என்னவென்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
ரூபன் அமோரிம்மின் குறிப்பிட்ட வழிமுறை
“அவர் உண்மையில் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், நான் இப்போது ஆட்டக்காரர்களைப் பார்க்கும்போது, அவர்கள் தங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்திக்கொள்வதைக் காண்கிறேன். அமோரிமின்கீழ் ஓர் அமைப்புமுறை இருந்தது, விளையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறையும் இருந்தது. அந்த அமைப்புமுறை சரியாகச் செயல்பட்டால், ஆங்காங்கே விளையாடுவதற்கான இடைவெளிகள் உருவாகும். ஆனால், யுனைடெட் குழுவும் அதன் வீரர்களும், குறிப்பாகத் தாக்குதல் ஆட்டக்காரர்கள், எப்போதுமே தங்களைச் சற்று சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
“சில சமயங்களில், நிலைமை அப்படி இருப்பதில்லை. ஆனால், நான் இப்போது நடக்கும் ஆட்டங்களைப் பார்க்கும்போது குன்யா, எம்பியூமோ, அமாட் போன்றவர்கள் சில சமயங்களில் சிறப்பாகச் செயல்படவில்லை. அவர்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். ஆனாலும், அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களிடம் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், ‘சென்று அதை அனுபவித்து மகிழ், உனக்கு எது சிறப்பாக வருகிறதோ அதைச் செய்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன். அது ஒரு பெரிய மாற்றம் என்றும் கருதுகிறேன்,” என்று பிரவுன் கருத்துரைத்தார்.
முன்னாள் மேன்யூ ஆட்டக்காரராகவும் இருந்தாலும், வெஸ் பிரவுன் இப்போதும் அக்குழுவுடன் தொடர்பில் இருக்கிறார்; அக்குழுவின் களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதுபற்றிக் கேட்டபோது, “ஆமாம், அதிர்ஷ்டவசமாக, நான் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நிறைய வேலை செய்கிறேன். அதற்கான காரணங்களில் ஒன்று, நான் இந்த ஊர்க்காரன் என்பதுதான். நான் இன்னும் மான்செஸ்டரைச் சேர்ந்தவன், அதனால் இதுதான் என் வீடு. வீரர்கள் மான்செஸ்டரை விட்டு வெளியேறும்போதோ அல்லது ஓய்வு பெறும்போதோ, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். ஆனால் இது என் வீடு!
“அதனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, குழு என்னை சில வேலைகளைச் செய்யச் சொன்னது. அன்று முதல் நான் உண்மையிலேயே அதை நிறுத்தியதில்லை. அதனால், நான் சொன்னதுபோல, இது என் வீடும்கூட. நான் இந்தக் குழுவை நேசிக்கிறேன். சிறு வயதிலிருந்தே நான் இந்தக் குழுவுடன் இருக்கிறேன். அப்போதிருந்த பல ஊழியர்களை எனக்கு இன்னும் தெரியும்,” என்றார்.
மேன்யூ குழுவின் விசுவாசி
மேன்யூ காற்பந்துக் குழுவின் இளையர் காற்பந்துப் பயிலகத்தில் 13 வயதில் தம்மை இணைத்துக்கொண்ட பிரவுன், இன்றும் அக்குழுவின் ஒரு விசுவாசியாகப் பணியாற்றி வருகிறார். தம்மால் முடிந்த இடங்களில் உதவ முயல்வதில் அவர் மகிழ்ச்சி கொள்கிறார். அத்துடன், குழுவிற்காக ஏதாவது செய்யச் சொன்னால், அவர் அதை மகிழ்ச்சியுடன் செய்கிறார்.
மேன்யூவின் முன்னாள் காற்பந்து பயிற்றுவிப்பாளர் சகாப்தம் ஃபெர்குசன் பணியிலிருந்தபோது இளையர் காற்பந்துப் பயிலகத்தில் இளவயதில் சேர்ந்தார் பிரவுன். ஃபெர்குசனிடம் தாம் பெற்ற அனுபவத்தையும், கடந்து வந்த பாதையையும், திடலுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதையும் பிரவுன் விவரித்தார்.
“ஃபெர்குசன் தொடக்கத்தில் மிகவும் அச்சுறுத்துபவராக இருந்தார். குறிப்பாக, உங்களுக்கு 13, 14 வயதாக இருக்கும்போது, அவரைக் கண்டாலே பதற்றமாக இருக்கும். மேலும், அவர் கேன்டனா, மார்க் ஹியூஸ், ராப்சன் போன்ற அற்புதமான வீரர்கள் பலருக்கும் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பார். ஆனாலும், எப்போதும் அவரே வந்து இளையர் குழுவிடம் பேசுவார். இப்போது பார்க்கையில், அவர் செய்தது மிகவும் நல்ல செயல் என்று நான் நினைக்கிறேன்.
“மேன்யூ குழு எப்படிப்பட்டது, அதன் தரநிலைகள் என்ன என்பதை அவர் எங்களுக்குப் புரிய வைத்தார். இளவயதிலேயே முதல்நிலைக் குழுவிற்காக விளையாடும் திறமை உங்களிடம் உள்ளது என்பதை அவர் எப்போதும் எங்களுக்கு உணர வைப்பார். இல்லையென்றால், நீங்கள் இங்கே இருந்திருக்க மாட்டீர்கள்,” என்று பிரவுன் சொன்னபோது அவரது முகத்தில் ஒரு நன்றி உணர்ச்சி தென்பட்டது.
உற்சாகமளித்த 1992ஆம் ஆண்டுக் குழு
“நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும், கவனிக்க வேண்டும், செவிமடுக்க வேண்டும். பிறகு அதைத் திடலில் வெளிப்படுத்துவது உங்களைப் பொறுத்தது. எனக்கு முன்பிருந்த பல வீரர்களை, 92ஆம் ஆண்டு குழுவில் இடம்பெற்றிருந்தவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் எனக்கு மிகவும் ஊக்கமளித்தனர். கடினமாக உழைத்து, நன்றாக விளையாடினால், மேன்யூ சார்பில் எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று உற்சாகமூட்டினர்.
யுனைடெட் குழுவைவிட்டுச் சென்றிருந்தாலும் அவர்கள் எப்போதாவதோ அல்லது அடிக்கடியோ பிரீமியர் லீக்கில் ஒரு பெரிய ஆட்டம் நடக்கும் போதெல்லாம், அதைக் காண வந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, மே 3ஆம் தேதி ஆட்டத்தைக் காண டியேகோ ஃபோர்லான் வந்ததைப் போல, பலரும் இன்னமும் இந்தக் குழுவுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
அது பற்றி பிரவுனிடம் கேட்டபோது, “அது எந்தக் குழுவிற்கும் அவமரியாதை இல்லை. ஆனால், நீங்கள் ஒரு குழுவைவிட்டு வெளியேறும்போதோ அல்லது வேறு ஒரு குழுவிற்காக விளையாடச் செல்லும்போதோ, அந்த வித்தியாசத்தை உணர்வீர்கள்.
“மான்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய குழு இல்லையென்றாலும், மிகவும் புகழ்பெற்ற குழுக்களில் ஒன்றாகும். எங்களுக்கு எல்லா இடங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நன்றாகக் காற்பந்து விளையாடவும், கிண்ணங்களை வெல்லவும் முயல்கிறோம். நான் வயதில் மூத்தவனாக இருந்து முதல் குழுவிற்காக விளையாடியபோது, எங்களால் கிண்ணங்களை வெல்ல முடிந்தது. அதாவது, நிர்வாகி சில நல்ல குழுக்களை உருவாக்கினார். நாங்களும் நிறைய கிண்ணங்களை வென்று தந்தோம்.
“அது உயர்ந்த தரம், அர்ப்பணிப்பு, அதாவது குழுவில் உள்ள சிறந்த வீரர்கள், சிறந்த தலைவர்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதை நிர்வாகியும் உணர்ந்துகொண்டார். இனிவரும் காலங்களில், அவர் எப்போதும் உங்களை இன்னும் சிறந்தவராக மாற்ற முயல்வார். அதாவது, ‘சரி, நீங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள், ஆனால் உங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியுமா?’ என்று கேட்பார். அதுதான் அவர் நிர்ணயித்த தரம்,” என்று விளக்கினார்.
சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி
சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடும் வாய்ப்பு பல ஆண்டுகளாகக் கைநழுவிய நிலையில், அடுத்த பருவத்தில் விளையாட மேன்யூ தகுதி பெற்றுள்ளது.
அதில் எப்படி மேன்யூ விளையாட வேண்டும், அதற்கிருக்கும் சவால்கள் என்ன என்று நினைக்கிறீர்கள் என்று பிரவுனிடம் கேட்டபோது, “சாம்பியன்ஸ் லீக்கிற்கு நாம் மீண்டும் திரும்புவது அனைவர்க்கும் உற்சாகத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன். நாம் இருக்க வேண்டிய இடம் அதுதான். சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டிகளைப் பார்த்தால், அதன் உயர்தரம் தெரியும்.
“எல்லாரும் அத்தகைய நிலையிலேயே இருக்க விரும்புவர். மேலும் அதன் வடிவம் வித்தியாசமானது. நாம் மீண்டும் அங்கு திரும்புவது சிறப்பாக இருக்கும். இந்தக் கோடையில் நாம் சில வீரர்களை இழக்கப் போகிறோம். ஆனால், சாம்பியன்ஸ் லீக்கில் இருப்பது, சில மிகச் சிறந்த வீரர்களை அணிக்குள் கொண்டுவர உதவும் என்றும் நான் நினைக்கிறேன். அதுதான் உண்மையில் முக்கியமானது. அணியை மேலும் வலுவாக்கும்,” என்று நேர்காணலை நிறைவுசெய்தார் வெஸ் பிரவுன்.
சிங்கப்பூர் தமிழ் முரசு ஊழியர்களுக்கும் வாசகர்களுக்கும் அவர் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

