ரியாத்: சவூதி அரேபியாவில் ராட்டினம் ஒன்று பழுதடைந்து விழுந்ததில் குறைந்தது பலர் காயமடைந்தனர்.
‘360 டிகிரிஸ்’ என்ற பிரபல ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென பழுதடைந்து பல மீட்டர் உயரத்திலிருந்து தரையில் விழும் காட்சிகளைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
புதன்கிழமை (ஜூலை 30) நடந்த சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் நால்வர் படுகாயமடைந்தனர் என்றும் சவூதி அரேபியாவின் அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவித்தது.
சம்பவத்தை அடுத்து சவூதி அரேபியாவின் தென்மேற்கு வட்டாரமான டாஇஃப் பகுதியில் உள்ள கேளிக்கைப் பூங்கா மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரிப்பதாகவும் அல் அரேபியா தொலைக்காட்சி குறிப்பிட்டது.
எண்ணெய் சார்ந்த பொருளியலைப் பன்முகப்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியா பல்வேறு கேளிக்கைப் பூங்காக்களையும் பொழுதுபோக்கு நிலையங்களையும் கட்டிவருகிறது.
அவற்றுள் ஆகப் பெரிய கட்டுமானங்களில் ஒன்று கிடியா என்ற திட்டம். ரியாத்துக்கு அருகே உருவாக்கப்படும் அது கேளிக்கைப் பூங்காக்களுக்கும் பந்தயக் கார்களுக்குமான பொழுதுபோக்கு நகரம் என்று வருணிக்கப்படுகிறது.