திருவனந்தபுரம்: கேரளத் தலைநகரின் வேம்பையம் பகுதியில் உள்ள ‘ஹெப்பிலேன்ட்’ கேளிக்கைப் பூங்காவில் வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்த ராட்டினம் திடீர் என வியாழக்கிழமை (மே 28) மதியம் 2 மணியளவில் சரிந்து விழுந்தது.
அந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் காயம் அடைந்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் ராட்டினத்தை இறுகப் பிடித்துக்கொண்டிருந்த இரும்புக் கட்டமைப்புகளின் (வெல்டிங்) இணைப்புகள் வழிவிட்டதால் அந்த இயந்திரம் சரிந்து விழுந்து நொறுங்கியது.
கேரள மாநிலத்தின் வெஞ்சாரமூடு காவல்துறைப் பிரிவு விசாரணையைத் தொடர்கிறது.
தீயணைப்புப் படையின் மீட்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்தை விரைந்து அடைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ஒருவருக்குக் கடுமையான காயம்
ஒரு மாதுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டதால் தனிப்பட்ட சிகிச்சைக்காக அவர் அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காயம் அடைந்த மற்றவர்கள் சீராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, பூங்காவில் அதிகமான வருகையாளர்கள் நிரம்பியிருந்தனர். அதிர்ஷ்டவசமாக காயமடைவதிலிருந்து பலர் தப்பினர்.
ராட்டினம் கட்டாய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்புச் சான்றிதழ்கள் பெறப்பட்டனவா போன்ற விவரங்கள் அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறது.

