காஜாங்: கெடா மாநிலத்தில் உரம் விநியோகம் தாமதமானது தொடர்பான விசாரணையின்கீழ் வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சபு மற்றும் அந்த அமைச்சின் தலைமைச் செயலாளரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சால் ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டது தொடர்பாக சென்ற மாதம் (ஆகஸ்ட்) 26ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் தொடர்பில் இதுவரை 37 சாட்சிகள் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.
இதில் முகமது சபுவின் வாக்குமூலம் செப்டம்பர் 16ஆம் தேதியும் தலைமைச் செயலாளரின் வாக்குமூலம் அதற்கு முந்தைய நாளும் பதிவு செய்யப்பட்டன.
“விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று காஜாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 471ன்கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் விசாரணையை முழுமைப்படுத்த மேலும் பல சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றும் திரு அப்துல் ஹாலிம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவியல் கூறுகளும் நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதாக ஆணையம் கருதினாலும் தற்போது குற்றவியல் அம்சங்களிலேயே அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.
“குற்றவியல் அம்சங்களில் கவனம் செலுத்துவதால், நிர்வாகப் பிரச்சினைகளை தற்போதைக்கு ஒதுக்கி வைப்போம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, ஆணையத்தின் முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனம் 616,015 மூடை உரங்களை விநியோகிக்க வேண்டிய நிலையில், செப்டம்பர் வரை 333,655 மூடைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு 2,82,360 மூடைகள் தட்டுப்பாடு நிலவியது தெரியவந்தது.
