மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் யுகேட்டான் தீவில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இதனை அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புச் செயலகம் தெரிவித்தது.
மெரிடா மற்றும் காம்பேச் நகர்களுக்கு இடையிலான விரைவுச்சாலையில் லாரி, கார், டாக்சி ஆகியன ஒன்றோடு ஒன்று மோதின. பலியான 15 பேரும் அந்த மூன்று வாகனங்களிலும் பயணம் செய்தவர்கள் என அதிகாரிகள் கூறினர்.
அந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்ட யுகேட்டான் ஆளுநர், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோருக்கு உடனடி உதவிகளைச் செய்வதில் பாதுகாப்பு, அவசரநிலை மற்றும் சுகாதாரச் சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருவதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டார்.