உலகக் கிண்ணக் காற்பந்தில் இங்கிலாந்திற்கும் பனாமாவுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது.
சனிக்கிழமை (ஜூன் 27) நியூயார்க்கிற்கு அருகிலுள்ள நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் ஆட்டம் மழைக்கு மத்தியில் நடைபெற்றது.
ஜூட் பெல்லிங்காம் ஒரு கோல் அடித்ததோடு, ஹேரி கேன் கோல் அடிக்கவும் உதவினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி ‘எல்’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோவேஷியா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், கானா 4 புள்ளிகளையும் பெற்றன.
மூன்று ஆட்டங்களிலும் தோற்ற பனாமா அணி, கடைசி இடத்தைப் பிடித்தது.
அடுத்ததாக நடைபெறும் ‘ரவுண்ட் ஆஃப் 32’ சுற்றில் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணியை இங்கிலாந்து எதிர்கொள்ளும்.
ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி பந்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோல் ஏதும் விழவில்லை.
பின்னர், 62வது நிமிடத்தில் புக்காயோ சாக்கா ‘கார்னர்’ வாய்ப்பு மூலம் அனுப்பிய பந்தை, பெல்லிங்காம் தமது இடது காலால் உதைத்து முதல் கோலை அடித்தார்.
எதிரணி வீரர் தடுக்க முயன்றபோது காற்பந்து, கோல் காப்பாளர் ஆர்லாண்டோ மாஸ்கேராவைத் தாண்டி வலைக்குள் சென்றது. அடுத்த ஐந்து நிமிடங்களில் பெல்லிங்காம் இடதுபுறமிருந்து தூக்கியடித்த பந்தை, ஹேரி கேன் தலையால் முட்டி கோலாக்கினார்.
இது, உலகக் கிண்ணப் போட்டியில் ஹேரி கேன் அடித்த 11வது கோல்.
10 கோல்கள் அடித்திருந்த கேரி லினேக்கரின் முந்தைய இலக்கைத் தாண்டி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்துக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெயரை இதன் மூலம் கேன் பெற்றுள்ளார்.
இரண்டாவது கோல் விழுந்ததும் நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கத்தின் சூழல் மாறியது. அதுவரையில் கவலையுடன் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள், ஆட்டத்தின் இடைவேளையின்போது உற்சாகமடைந்தனர்.

