ஆப்பிரிக்க கண்டத்தின் ஆக உயரமான மலையான கிளிமஞ்சாரோ சிகரம் ஏறுவது எளிதான காரியம் அன்று. அதன் சிகரத்தை எட்டுவதற்கு மனதளவிலும் உடலளவிலும் வலிமை தேவை.
இதுவரை வெகு குறைவான மலேசியர்களே அதன் உச்சியை எட்டியுள்ளனர். மலேசியத் தமிழ் குடும்பம் ஒன்று அண்மையில் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தைத் தொட்டது. அக்குடும்பத்தில் இளையர் ஒருவரும் இடம்பெற்றார்.
யசோதேவ் யாஷ் கணேசனுக்கு இவ்வாண்டு 15 வயதுதான் ஆகிறது. இவ்வேளையில், கிளிமஞ்சாரோ மலை ஏறிய ஆக இளம் மலேசியராக இருக்கக்கூடும்.
கடந்த ஜனவரியில்தான் தந்தை கணேசன் ஆறுமுகம், தாயார் லோகேஸ்வரி சண்முகம் உட்பட யசோதேவின் குடும்பத்தார் மலையேறத் தொடங்கினர்.
தம்முடைய தாயார், மாமா செந்தில்நாதன் சண்முகத்துடன் சேர்ந்து ஜனவரி 27ஆம் தேதி யசோதேவ் மலை உச்சியை எட்டினார்.
மலை உச்சியை எட்டியபோது லோகேஸ்வரி உணர்ச்சி பொங்கினார். இவ்வளவு தூரம் கடந்து வந்து தாங்கள் பட்ட பாட்டிற்கு பலன் கிடைத்ததை எண்ணி அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
மலை உச்சியிலிருந்து அருமையான காட்சிகளைப் பார்த்து ரசித்துவிட்டு குடும்பத்தார் கீழே இறங்கத் தொடங்கினர்.
"எங்களுடைய ஆற்றலைப் பரிசோதித்த நடந்த நடவடிக்கை இது. எங்களுடைய வலிமையை இங்குதான் தெரிந்துகொண்டோம்," என்று குறிப்பிட்ட லோகேஸ்வரி, ஒட்டுமொத்த மலையேறும் அனுபவமும் அர்த்தமுள்ளதாக இருந்ததாகச் சொன்னார்.
நன்றி: ஃப்ரீ மலேசியா டுடே