பெட்டாலிங் ஜெயா: கலிமந்தானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியா உதவ முன்வந்துள்ளதை இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வரவேற்றுள்ளார்.
இரு அண்டை நாடுகளும் தங்களுக்கு இடையிலான நெருங்கிய சகோதரத்துவ உறவைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் 18ஆம் தேதி போகோரில் உள்ள தனது இல்லத்தில் மலேசியத் துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடியைச் சந்தித்த பிறகு பேசிய திரு பிரபோவோ, ஒரு விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள், 52 தீயணைப்பு வீரர்கள் உட்பட தீயணைப்புப் படையை அனுப்ப மலேசியா முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
“மலேசிய துணைப் பிரதமரின் வருகையை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவர் எனது பழைய நண்பர். எனவே, அவர் என்னைச் சந்தித்தார். நாங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினோம்,” என்றார் அவர்.
ஜப்பான் உட்பட பல நாடுகளிலிருந்தும் இந்தோனீசியா உதவிகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று திரு ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் புகைமூட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் இதுபோன்ற உதவிகள் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் செயற்கை மழை பொழியவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மலேசியாவின் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் செப்டம்பர் 19, 20 தேதிகளில் திட்டமிடப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
“இருப்பினும், மேகங்கள் இருப்பதைப் பொறுத்தே செயற்கை மழை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்,” என்று அதன் தலைமை இயக்குநர் மீயோர் இஸ்மாயில் மீயோர் அகிம் சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசிய வானிலை ஆய்வு நிலையம், மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம், விமானப் படை ஆகியவற்றுடன் இணைந்து பேரிடர் நிர்வாக அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது.
