சுவா: ஃபிஜியின் தலைநகரான சுவாவில், எச்ஐவி நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் திறக்கப்பட்டிருக்கும் மருந்தகத்தை நோக்கி மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.
கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், கடந்தாண்டு மட்டும் 2,000க்கும் மேற்பட்ட புதிய எச்ஐவி பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை 26 விழுக்காடு அதிகமாகும். இதன் காரணமாக, அந்நோய்ப் பரவலை தேசிய நெருக்கடியாக அந்நாடு அறிவித்துள்ளது.
எச்ஐவி ஃபிஜியில் காட்டுத்தீ போல் பரவி வருவதாக அந்நோய்ப் பரிசோதனைக்காக வந்த 46 வயது சிட்டேரி தினவாய் ஏஎஃப்பியிடம் கூறினார்.
மக்கள் இருப்பிடங்களுக்குச் சென்று எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ‘மூன்லைட் கிளினிக்’ எனும் புதிய முயற்சியை ஃபிஜி கையில் எடுத்துள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் மீண்டோரை ஆதரிக்கும் அமைப்பின் தொண்டூழியர்களும் எல்ஜிபிடிகியூ+ சமூகத்தினருடன் இணைந்து பணியாற்றும் ‘ரெயின்போ ப்ரைடு ஃபிஜி’ அமைப்பினரும் பரிசோதனைக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

