தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று குழந்தைகள், மும்மூன்று ஆண்டு இடைவெளி, ஆனால் பிறந்தநாள் அதேதான்!

1 mins read
370fe63e-0d1b-4b39-9cc1-80f4fa1744c1
உடன்பிறப்புகள் ஐவர் வெவ்வேறு ஆண்டுகளில், ஆனால் ஒரே நாளில் பிறந்துள்ளதே கின்னஸ் சாதனை. மாதிரிப்படம் -
multi-img1 of 2

மணிலா: மும்மூன்று ஆண்டு இடைவெளி இருந்தபோதும் ஒரே தேதியில் மூன்று குழந்தைகளைப் பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார் பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒரு பெண்.

தம் மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவை, அம்மூன்று பிள்ளைகளின் பிறந்தநாளும் ஜனவரி 27 என ஒரே தேதியைக் காட்டுகின்றன.

இதனைத் தாங்கள் திட்டமிட்டுச் செய்யவும் இல்லை, தாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை, ஆனால் இது கடவுளின் அன்பளிப்பு என்று பெருமகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கூறினார் பாமன் ஃபயே ஹேசல் கபனெரோ எனும் அத்தாய்.

"ஜனவரி 27 என்ற தேதியை மட்டுமே என் கருப்பை அறிந்திருக்கிறதுபோலும்!" என்றார் அவர்.

அம்மூன்று குழந்தைகளும் முறையே 2017, 2020, 2023ஆம் ஆண்டுகளில் பிறந்தன.

மூன்று குழந்தைகளுமே இயல்பான மகப்பேற்றின் (normal delivery) மூலமே பிறந்ததால், இதில் எந்த ஏமாற்றும் இல்லை என்று திருவாட்டி கபனெரோ குறிப்பிட்டார்.

இப்படி நடப்பது அரிதினும் அரிது. வெவ்வேறு ஆண்டுகளில், ஆனால் ஒரே தேதியில் ஐந்து உடன்பிறப்புகள் பிறந்ததே கின்னஸ் சாதனை.

"17.7 பில்லியனில் ஒருமுறை மட்டுமே அப்படி நடக்க வாய்ப்புள்ளது," என்று கின்னஸ் சாதனை அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது.