ஜெனிவா: உலக அளவில் உதவித் திட்டங்களுக்கான நிதி குறைந்து வருவதால் ஏழ்மையில் வாடும் மக்களுக்குப் போதிய உணவு வழங்க முடியாமல் போகலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்கீழ் இயங்கும் உலக உணவுத் திட்டத்திற்கான நிதி 75 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் உணவில்லாமல் தவிக்கக்கூடும்.
“நிதி இல்லாமல் தடுமாறுகிறோம். எந்த நாட்டுக்கு உதவுவது, யாருக்கு உதவுவது என்று யோசித்துக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” என்று உலக உணவுத் திட்டத்திற்கான உயர் அதிகாரி ரானியா டகாஸ்-கமரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிதி உதவி வழங்குவதை அமெரிக்கா தொடர்ந்து குறைத்து வருவதாக ரானியா கூறினார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆகப் பெரிய நன்கொடையாளராக அமெரிக்கா உள்ளது.
நன்கொடைகளைக் குறைத்தாலும் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்கிறது.
“தற்போது ஐரோப்பிய நாடுகளும் தங்களது நன்கொடைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பெரிய தாக்கம் ஏற்படும். தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்றும் ரானியா கூறினார்.
பல இடங்களில் பஞ்சம் பட்டினி உருவாகும் சூழல் உள்ள நிலையில் நிதி குறைக்கப்படுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஊட்டச்சத்து நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பிள்ளைகளுடன் நடந்துவந்த பெண் உணவில்லாமல் திரும்புகிறார். அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலையளிக்கிறது,” என்று ரானியா வேதனை தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா மோதல் தொடர்வதால் விநியோகச் சங்கிலியிலும் பிரச்சினைகள் உள்ளன. அது மேலும் சில செலவுகளைக் கூட்டுகிறது.
2026ஆம் ஆண்டு உலக உணவுத் திட்டம் 110 மில்லியன் மக்களுக்கு உதவ நினைக்கிறது. ஆனால் அதற்கு 17 பில்லியன் வெள்ளி தேவைப்படுகிறது.

