சீனத் தொலைத்தொடர்பு கருவிகளை அகற்ற 3 பி. அமெரிக்க டாலர் நிதியுதவி

2 mins read
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வருடாந்தர தற்காப்பு மசோதாமீது அடுத்த வாரம் வாக்கெடுப்பு
65058903-eeea-45d7-a715-10cc8f4242a1
ஹுவாவெய், பிற சீனத் தொலைத்தொடர்பு கருவிகளைத் தங்கள் கம்பியில்லா கட்டமைப்பிலிருந்து அகற்றுமாறு அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சீனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவாவெய் (Huawei), ஸிடிஇ (ZTE) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கருவிகளை அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலிருந்து அகற்ற அந்நாடு முடிவெடுத்துள்ளது.

சீனக் கருவிகளை அகற்றும் நிறுவனங்களுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

நிதியுதவி உட்பட வேறு சில முக்கிய அம்சங்கள் நிறைந்த வருடாந்தர தற்காப்பு மசோதாவின் மீது அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறத்தலாக இருக்கும் அபாயங்களைக் களையும் பொருட்டு, சீனத் தொலைத்தொடர்பு கருவிகளை அகற்றும் நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறியது.

சீனாவின் உயிரி தொழில்நுட்பத் திறன்களின் தற்போதைய நிலை குறித்த உளவுத்துறை மதிப்பீடு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான சீனாவின் முயற்சிகள் போன்ற சீனாவை இலக்காகக் கொண்ட மற்ற அம்சங்களை உள்ளடக்கிய 1,800 பக்க அறிக்கையை டிசம்பர் 7ஆம் தேதி அமெரிக்கா வெளியிட்டது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கருவிகளை அகற்றுவதற்கு 4.98 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என அமெரிக்காவின் மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

இருப்பினும், “அகற்றவும் மாற்றவும்” திட்டத்திற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மட்டுமே அந்நாட்டு அரசாங்கம் முன்பு ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாவெய், பிற சீன தொலைத்தொடர்பு கருவிகளைத் தங்கள் கம்பியில்லா கட்டமைப்பிலிருந்து அகற்றுமாறு அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

126 நிறுவனங்களின் கட்டமைப்பில் பொருத்தப்பட்டிருந்த சீனக் கருவிகளை அகற்றி, வேறு கருவிகளைப் பொருத்தும் திட்டத்திற்குக் கூடுதலாக 3.08 பில்லியன் நிதியுதவி தேவைப்படுவதாகவும் அந்த நிதியை உடனடியாக அமெரிக்க அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் கடந்த வாரம் அந்நாட்டு மத்திய தொலைத்தொடர்பு ஆணயத்தின் தலைவர் ஜெசிகா ரோசன்வொர்செல் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமது தேசிய பாதுகாப்பையும் குறிப்பிட்ட சில கட்டமைப்பைச் சார்ந்திருக்கும் கிராமப்புறப் பயனாளர்களின் தொலைத்தொடர்புச் சேவையையும் இந்த நிதிப் பற்றாக்குறை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி உடனடியாக வழங்கப்படாத பட்சத்தில் கிராமப்புறங்களில் செயல்படும் சில தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் செயலிழக்கும் சூழல் ஏற்படலாம். இதனால், 911 அவசர உதவி சேவையும் பாதிக்கப்படக்கூடும் எனத் திருவாட்டி ஜெசிகா எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்