நிதி முறைகேடு: பசில் ராஜபக்சேவைக் கைதுசெய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைகேடு: பசில் ராஜபக்சேவைக் கைதுசெய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

1 mins read
17fb8a28-86b9-40e8-b97a-f7d4c36714d4
இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே. - படம்: தமிழ்வின்

கொழும்பு: இலங்கை அரசாங்கத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்ட பலரைக் கைதுசெய்யும்படி குற்றப் புலனாய்வுத் துறைக்குக் (சிஐடி) கொழும்புத் துறைமுகக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் இலங்கை ரூபாயை 2014 ஊவா மாநில அவைத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியதாக அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சேவுடன் இலங்கைச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன, முன்னாள் மேலாண்மை இயக்குநர் ரூமி ஜாஃபர் உள்ளிட்டோரும் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள்.

அவர்களைக் கைதுசெய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் சிஐடி கோரியிருந்தது.

சந்தேகப் பேர்வழிகளைக் கைதுசெய்வதற்காக அவர்களின் வீடுகளுக்குச் சென்றபோது அவர்கள் அங்கு இல்லை என்று சிஐடி தெரிவித்தது.

அதனையடுத்து, சந்தேகப் பேர்வழிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து வெள்ளிக்கிழமை (மே 29) நீதிபதி உத்தரவிட்டார்.

2014 தேர்தலின்போது சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிதியைப் பயன்படுத்தி, சுற்றுலாக ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எனக் கூறி கிட்டத்தட்ட 12,000 டி-சட்டைகள் அச்சிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றில் அரசியல் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததைப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். டி-சட்டையின் ஒரு பக்கத்தில் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவின் படமும் இன்னொரு பக்கத்தில் கட்சியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அத்துடன், அந்த டி-சட்டைகள் மொனராகலை மாவட்டத்தில் நடந்த ஓர் அரசியல் நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்