சிட்னி: பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்கின் நிறுவனங்களில் ஒன்றான எக்ஸ் சமூக ஊடகத் தளத்தின்மீது சிறார் இணையப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத குற்றத்துக்காக விதிக்கப்பட்ட $591,000 அபராதத்தை ஆஸ்திரேலிய நீதிமன்றம் வியாழக்கிழமை (மே 21) உறுதி செய்தது.
தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள எக்ஸ் நிறுவனத்துக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் நடந்துவந்த மூன்றாண்டு சட்டப் போராட்டம், இதோடு முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய சட்டப்படி, இணைய பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட ‘இசேஃப்டி’ (eSafety) என்ற அமைப்புக்கு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறார்கள் பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்த எவ்விதச் செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்பதை அறிந்துகொள்ள நிறுவனங்களுக்கு அந்த அமைப்பு ஆணையிடலாம். அவ்வாறு முறையாக விளக்கங்கள் வழங்காத நிறுவனங்களுக்கு அபராதமும் இசேஃப்டி அமைப்பால் விதிக்கமுடியும்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், முன்பு ‘டுவிட்டர்’ என்று அழைக்கப்பட்ட தற்போதைய எக்ஸ் நிறுவனத்தை இசேஃப்டி அமைப்பு, சிறார் பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் இணையத்தில் பரவுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும்படி கேட்டுக்கொண்டது,
அதே ஆண்டு மார்ச் மாதம் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க் அமைத்த ‘எக்ஸ் கார்ப்’ நிறுவனத்துடன் டுவிட்டர் இணைக்கப்பட்டது. எனவே முறையான விளக்கம் அளிக்காத குற்றத்துக்கு எக்ஸ் தளத்துக்கு அப்போது அபராதம் விதிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இசேஃப்டி அமைப்பு, சிறார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனுப்பிய விளக்க அறிக்கைக்கு எக்ஸ் தளம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, இந்த அபராதத்தை நீதிமன்றம் மே 21ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“அதிகபட்ச அபராதம், சிறார்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டதே தவிர, எக்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் இந்நாட்டில் வியாபாரம் செய்யும் செலவாக எடுத்துக்கொள்வதற்கு அல்ல,” என்று நீதிபதி மைக்கல் வீலாஹன் கருத்துரைத்தார்.
பல நாடுகளின் கவனித்தை ஈர்த்த இணைப் பாதுகாப்புச் சட்டம்
சிறார்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்த முடியாது என்ற சட்டத்தை 2025ல் முதன்முதலில் அமலாக்கி, ஆஸ்திரேலியா உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

