வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ ஒருபுறம் கட்டுக்கடங்காமல் எரியும் நிலையில் மறுபுறம் தீயணைப்பதில் ஏற்பட்டுள்ள இடையூறு குறித்த குறைகூறல்களும் தீயைப் போல மளமளவென பரவுகின்றன.
கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றி உள்ள பகுதிகளும் அருகில் உள்ள பகுதிகளும் ஜனவரி 7 முதல் எரிந்து கருகி வருகின்றன.
காட்டுத் தீக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11க்கு அதிகரித்துவிட்டது. 10,000க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டடங்களும் தீயில் கருகி பலத்த சேதமடைந்து உள்ளன.
தீயை அணைப்பது பெரும் சவாலாகத் தொடருகிறது.
காட்டுத்தீ எரியத் தொடங்கிய பசிபிக் பேலிசேட் வட்டாரத்தில் உள்ள நீர்க்குழாய்கள் வறண்டுவிட்டன. அங்கு நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலைமையை மோசமாக்கி வருகிறது.
“இப்படிப்பட்ட நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு பதில் வேண்டும்,” என்று கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கெவின் நியூசம் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகர நீர் மற்றும் மின்சாரத் துறைக்கும் பொதுப் பணித் துறைக்கும் அவர் எழுதி உள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர்ப் பற்றாக்குறையும் நீர் அழுத்தக் குழாய் போதுமான அளவில் இல்லாததும் தீயணைப்பில் பெரிய தொந்தரவை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நியூசம், இது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய சுயேச்சை அறிக்கை ஒன்றைத் தயாரித்து அனுப்ப மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் தீயணைப்புக் கட்டமைப்பு, பல ஏக்கர் பரப்பளவில் ஏற்படக்கூடிய தீ விபத்தைக் கட்டுப்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்படவில்லை என்பதும் ஒரு குறைபாடு என்று நியூயார்க்கின் பால் ஸ்மித் கல்லூரி பேரிடர் நிர்வாகத் துறை துணைப் பேராசிரியர் கிறிஸ் ஷீச் தெரிவித்து உள்ளார்.
வீடுகள் மற்றும் கடைகளில் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைச் சமாளிக்கும் வகையிலேயே நகரத் தீயணைப்பு வசதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி கிறிஸ்டின் கிரவுலி வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) சிஎன்என் ஊடகத்திடம் பேசியபோது தமது துறைக்குத் தேவையான பல வளங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்றார்.
குறிப்பாக, அதிக பணியாளர்கள் மற்றும் வளங்களோடு நிதியும் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் பதவியில் மீண்டும் அமர இருக்கும் டோனல்ட் டிரம்ப், கலிஃபோர்னிய மாநில ஆளுநர் செய்த பல்வேறு தவறுகளே தீயணைப்பில் இடையூறு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்று ஏற்கெனவே கூறி இருந்தார். அந்த ஆளுநர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.