பேங்காக் மதுபானக் கூடத்தில் தீ: 27 பேர் மரணம்

பேங்காக் மதுபானக் கூடத்தில் தீ: 27 பேர் மரணம்

1 mins read
26acec4a-586c-4cf1-87a4-453da6b5e50b
தீச்சம்பவத்தில் மாண்ட ஒருவரை அவசர மருத்துவ உதவி வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றிய காட்சி. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள பிரபல மதுபானக் கூடத்தில் மூண்ட தீயில் 27 பேர் மாண்டனர்.

அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குனும் அதிகாரிகளும் திங்கட்கிழமை (ஜூலை 13) அந்தத் தகவலை உறுதிசெய்தனர். அண்மை ஆண்டுகளில் சுற்றுலா நடுவமான தாய்லாந்தை உலுக்கிய ஆக மோசமான தீச்சம்பவங்களில் இதுவும் ஒன்று.

“27 உடல்களை மீட்டுள்ளோம், மற்றவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்,” என்று பிரதமர் அனுட்டின் கூறினார். சம்பவ இடத்தை நள்ளிரவுவாக்கில் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

மரணமடைந்தோரில் 18 பேர் பெண்கள். சோய் லாட் பிராவ் 1 ரோட்டுக்கு அருகே மூண்ட நெருப்பைக் கிட்டத்தட்ட அரை மணிநேரத்தில் தீயணைப்பாளர்கள் அணைத்தர். மதுபானக்கூடத்துடன் கூடிய உணவகத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்யப்பட்டன. பின்னர் உணவக வாயிற்கதவுக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டதால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பவத்தில் மேலும் 63 பேர் காயமுற்றனர். அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாய் இருப்பதாக நகரின் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிப்புன்ட் சொன்னார். பாதிக்கப்பட்டோரில் பலர் சுற்றுப்பயணிகள் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துமதுக்கூடம்உணவகம்தீஉயிரிழப்புகாயம்