நியூசிலாந்து பூங்காவைப் பற்றி எரியும் நெருப்பு: தீ அணைப்பு முயற்சிகள் மும்முரம்

1 mins read
37e397c1-6832-4a94-bdf8-11bfc479a0a0
தீ விபத்து தொடங்கியபோது, சுமார் 40 மலையேறிகள் பூங்காவிலிருந்து பாதுகாப்பாக விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர். - படம்: ஆர்என்இசட் / அவுட்டோர் ஆக்ஸஸ்

வெல்லிங்டன்: நியூசிலாந்தின் டொங்காரிரோ தேசியப் பூங்காவில் மட்டுமீறிப் பரவும் பெரும் தீயை அணைக்கும் பணியைத் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

அந்நாட்டின் மத்திய வடக்குத் தீவில் அமைந்துள்ள பிரபலமான மலையேற்றப் பகுதியில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது.

சனிக்கிழமை (நவம்பர் 8) பிற்பகல் தொடங்கிய இந்தத் தீ விபத்து, தற்போது, 1,000 ஹெக்டர் அளவில் பரவியுள்ளதாக நியூசிலாந்து தீயணைப்பு மற்றும் அவசரகால அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு முழுவதும் தீயை அணைக்கும் முயற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவை நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

தீயணைப்பு மற்றும் அவசரகால அமைப்பின் உதவித் தளபதி நிக் வெஸ்ட், தீப்பரவல் இரவோடு இரவாக அதிகரித்ததை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், எந்தக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாகவோ தகவல் இல்லை.

தீ விபத்து தொடங்கியபோது, சுமார் 40 மலையேறிகள் பூங்காவிலிருந்து பாதுகாப்பாக விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

தீயின் முழு அளவையும் உறுதிப்படுத்த வான்வழி ஆய்வும் இன்று (நவம்பர் 9) மேற்கொள்ளப்படும். அதன் பிறகு, தீயைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர ஒரு முழு நாள் பணிகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த முயற்சியில், தரை தளத்தில் ஆறு தீயணைப்பு லாரிகள் மற்றும் ஐந்து டேங்கர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆறு ஹெலிகாப்டர்களும் விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்