தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவசரமாகத் தரை இறங்கிய கனடிய விமானத்தில் தீ; பயணிகள் தப்பினர்

1 mins read
d437a428-ba22-48dc-98d0-deb9f582e9f2
தரை இறங்கிய விமானம் தள்ளாடியதைக் காட்டும் காணொளிப் படம். - படம்: ஷாலினி/எக்ஸ் தளம்

ஹலிஃபாக்ஸ்: கனடாவில் உயரப் பறந்த விமானம் ஒன்றில் திடீர் என கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாகத் தரை இறங்கியது.

அந்தச் சம்பவம் சனிக்கிழமை (டிசம்பர் 28) இரவு நிகழ்ந்ததாக ஏர் கனடா விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

விமானத்தைத் தரை இறக்குவதற்கான விசையில் கோளாறு கண்டறியப்பட்டதால் கனடாவின் நோவா ஸ்காஷியாவில் உள்ள ஹலிஃபாக்ஸ் ஸ்டாண்ட்ஃபீல்ட் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.

ஆயினும், விசை கோளாறுடன் அவசர அவசரமாக இறக்கப்பட்டதால் அந்த விமானத்தில் தீப்பிடித்தது. அதனால் விமான நிலைய முனையத்தை அந்த விமானம் நெருங்க இயலவில்லை.

ஆயினும், விமானத்தில் இருந்த 73 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக ஏர் கனடா பேச்சாளர் ஒருவர் சிஎன்என் ஊடகத்திடம் கூறினார்.

யாருக்கும் காயமில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்தது.

ஓடுபாதையில் விமானம் சறுக்கி தள்ளாடியதாகக் கூறிய நிக்கி வேலண்டைன் என்னும் பயணி, விமானத்தின் இடதுபுறம் தீ எரிவதையும் சன்னல் வழியாக புகை உள்ளே வருவதையும் கண்டதாகக் கூறினார்.

விமானத்தின் இடது இறக்கைக்கு அருகே சன்னலின் வெறிப்புறம் தீப்பற்றி எரிவதை சமூக ஊடகங்களில் வலம் வந்த காணொளிகளில் காணமுடிந்தது.

குறிப்புச் சொற்கள்