தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹனோய் கரவோக்கே மதுக்கூடத்தில் தீ; 11 பேர் உயிரிழப்பு

2 mins read
095ed78a-1cf2-4a19-aa30-3a0a0bf32053
ஹனோயில் டிசம்பர் 18ஆம் தேதி ‘கரவோக்கே’ மதுக்கூடம் ஒன்றில் மூண்ட தீயில் 11 பேர் உயிரழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வியட்னாமியத் தலைநகர் ஹனோயில் உள்ள கரவோக்கே மதுக்கூடத்தில் புதன்கிழமை (டிசம்பர் 18) மூண்ட தீயில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வியட்னாமியக் காவல்துறை டிசம்பர் 19ஆம் தேதி தெரிவித்தது.

சம்பவம் தொடர்பான படங்களில், பலமாடிக் கட்டடம் ஒன்று தீயினால் பெருஞ்சேதமடைந்ததையும் வளைந்து நெளிந்த உலோகக் கம்பிகள் சிதறிக் கிடப்பதையும் காணமுடிகிறது.

சம்பவம் குறித்துப் புதன்கிழமை பின்னிரவு 11 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் பலர் அந்தக் கட்டடத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் ஏழு பேரை உயிருடன் மீட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் சம்பவத்தில் குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஆடவரைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

அவர் அந்த இசைக்கூடத்தில் மதுபானம் அருந்திவிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் அவர் பெட்ரோலை வாங்கிவந்து கட்டடத்தின் அருகிலிருந்த மோட்டார்சைக்கிள்களுக்கு அருகே அதை ஊற்றித் தீமூட்டியதாகக் கூறப்பட்டது.

பெருந்தீ அச்சுறுத்தும் வகையில் எரிந்ததால் உள்ளே சிக்கியோரைக் காப்பாற்ற யாரும் துணியவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

கட்டடத்தின் மேல்மாடங்களில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததால் உள்ளே இருந்தோர் தப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

நுழைவாயிலுக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததில் அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாகச் சிலர் கூறினர்.

பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் அவசர மருத்துவ உதவி வாகனங்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்