இந்தோனீசியக் கப்பலில் தீ: ஐவர் மரணம்

இந்தோனீசியக் கப்பலில் தீ: ஐவர் மரணம்

2 mins read
c752e0d8-329d-4a52-8f9f-5cbaf4a14c0b
இந்தோனீசிய பயணக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. - படம்: இபிஏ

சுரபாயா: இந்தோனீசிய பயணக் கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐவர் மாண்டனர்; 41 பேரைக் காணவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் என 271 பேருடன் கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்தக் கப்பல் மதுரா தீவை நெருங்கியபோது திடீரென அதில் தீப்பற்றியது.

‘கேஎம்பி முத்தியாரா செந்தோசா-2’ என்னும் பெயருடைய அந்தக் கப்பல் தெற்கு சுலாவேசியில் உள்ள மகாசர் என்னும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக இந்தோனீசியாவின் தேடி மீட்கும் முகமையான பசர்னாஸ் கூறியது.

உடனடியாக 255 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அது வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

காணாமல் போனோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மதுரா தீவு, ஜாவாவின் வடகிழக்குக் கடலோரம் அமைந்துள்ளது.

கப்பலில் தீப்பிடித்தது பற்றி அதன் மாலுமி, கப்பல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், அதன் பிறகு அவருடைய தொடர்பு கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கப்பலில் தீப்பற்றியதை அறிந்ததும் சிலர் கடலில் குதித்ததாகவும் அருகில் இருந்த கப்பல்கள் அவர்களைக் காப்பாற்றியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. எஞ்சியோரை மீட்புப் படையினர் மீட்டனர்.

அவசரமாக மீட்க நான்கு கப்பல்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தபோதிலும் தீப்பற்றி எரிந்த கப்பலை நெருங்க இயலவில்லை என்று மீட்புப் படையினர் கூறினர்.

இதற்கிடையே, மீட்கப்பட்ட பயணிகளைப் பாதுகாப்பாகக் கரைக்கு மீட்டுவரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சின் மூத்த அதிகாரி முகம்மது மஸ்யுத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கப்பல்தீமரணம்