ஜாவா புரோமோ மலையில் பரவிய தீ கட்டுக்குள்; புதிய இடங்களில் தீப்பற்றி எரிவதால் அச்சம்

ஜாவா புரோமோ மலையில் பரவிய தீ கட்டுக்குள்; புதிய இடங்களில் தீப்பற்றி எரிவதால் அச்சம்

1 mins read
4637e069-c551-4f28-8948-b955f68927ff
இந்தோனீசியாவிலுள்ள புரோமோ மலைப் பகுதியில் 500 ஹெக்டர் பரப்பளவு காட்டை எரித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், புதிய பகுதிகளில் தீ பற்றியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ மலை தேசியப் பூங்காவில் 550 ஹெக்டர் பரப்பளவைச் சாம்பலாக்கிய காட்டுத்தீ அணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தனர்.

ஆனால், எரிமலையின் பள்ளத்தைச் சுற்றியுள்ள ஏறக்குறைய 20 ஹெக்டர் பரப்பளவிலான புதிய பகுதிகளில் மீண்டும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவர் கட்டோட் சோப்ரோடோ தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மூண்ட காட்டுத்தீ, ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 550 ஹெக்டர் நிலப்பரப்பைப் பாதித்த நிலையில், தீவிர முயற்சிகளுக்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீ திங்கட்கிழமை மேலும் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறிய கட்டோட் சோப்ரோடோ, தீயை அணைக்கும் பணியில் 120க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அக்காட்டுத்தீக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பாதையில் முதன்முறையாகத் தீப்பற்றியதால், யாரோ ஒருவர் தீயை மூட்டிவிட்டு அதை முழுமையாக அணைக்காமல் சென்ற அலட்சியமே காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்புக் கருதி ஆகஸ்ட் 8 மாலை முதல் தேசியப் பூங்கா மூடப்பட்டுள்ளது. அச்சம்பவத்தில் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை.

குறிப்புச் சொற்கள்