பாத்தாமில் உள்ள கப்பல் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் மாண்டதாக டெதிக் என்ற இந்தோனீசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 24ஆம் தேதி பட்டறையில் அணைந்திருந்த எண்ணெய்க் கப்பலில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்ட சமயத்தில் பிடி ஏஎஸ்எல் (PT ASL) இந்தோனீசியக் கப்பல் பட்டறையில் இருந்த எண்ணெய்க் கப்பலில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாக டெதிக் ஊடகம் குறிப்பிட்டது.
தீச் சம்பவத்தில் காயமடைந்த ஐவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
“தீ விபத்தில் உயிர் தப்பியோரில் நால்வருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. ஒருவர் லேசான காயங்களுடன் தப்பினார்,” என்று பாத்து அஜி காவல்துறைத் தலைவர் ராடென் பிமோ டுவி லாம்பாங் (ஜூன் 25) கூறினார்.
தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஃபெடரல் இரண்டு கப்பலில் ஜூன் 24, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு மூண்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க ஊடகமான அந்தாரா சொன்னது.