இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீப்பற்றியதால் 14 பச்சிளங்குழந்தைகள் மாண்டுபோனதாக ‘டான்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இருந்த தாய்-சேய் நலப் பிரிவில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 7 மணியளவில் தீப்பற்றியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டது.
தகவலறிந்ததும் மீட்புக் குழுக்கள் அம்மருத்துவமனைக்கு விரைந்தன. ஆறு தீயணைப்பு வாகனங்களும் நான்கு அவசர மருத்துவ வாகனங்களும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இஸ்லாமாபாத் நிர்வாகம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
“தீ மேலும் பரவாமல் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கிருந்த குழந்தைகள் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டன. ஆயினும், 14 குழந்தைகள் இறந்துவிட்டன,” என்று அவ்வறிக்கை கூறியது.
தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் உதவி ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றியபோது மகப்பேற்றியல் பிரிவில் 15 பச்சிளங்குழந்தைகள் இருந்தன என்றும் மருத்துவர் ஒருவரால் அவற்றுள் ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டது என்றும் மருத்துவமனையின் பேச்சாளர் டாக்டர் அனீஸா ஜலீல் கூறினார்.
காலை 6.45 மணியளவில் குளிரூட்டி ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதே தீப்பற்றியதற்குக் காரணம் என்று ஜியோ தொலைக்காட்சியிடம் சுகாதார அமைச்சர் முஸ்தஃபா கமால் தெரிவித்தார். அங்கு உயிர்வாயுக் கலன்கள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, குழந்தைகள் மாண்டுபோனதற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப், குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.
“குழந்தைகளுக்கு இத்தகைய துயரம் நேர்வது தாங்க முடியாதது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பராமரிப்பு, புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுவந்த கட்டடத்தில் தாய்-சேய் நலப் பிரிவு செயல்பட்டு வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று மாலிக் இஸ்ரார் என்பவர் குறிப்பிட்டார. தம்முடைய உறவினர் ஒருவர் அப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.


