இந்தோனீசியாவின் பாப்புவாவில் தீ; 11 பேர் உயிரிழப்பு

இந்தோனீசியாவின் பாப்புவாவில் தீ; 11 பேர் உயிரிழப்பு

2 mins read
60373b9d-1940-4e51-9dcb-a48aa0ee159d
இந்தோனீசியாவில் உள்ள சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ஜெயாபுரா, இந்தோனீசியா: இந்தோனீசியாவின் கிழக்கில் உள்ள பாப்புவா பகுதியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஆறு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய பாப்புவா மாநிலத்தில் உள்ள பானியாய் நகரில் நள்ளிரவுக்குப் பிறகு அந்தத் தீச்சம்பவம் குறித்து முதன்முதலில் தெரியவந்தது. அது விரைவில் பல கடை வீடுகளுக்குப் பரவியதாக உள்ளூர்க் காவல்துறைப் பேச்சாளர் ஹென்றி ஜே. மனுருங் கூறினார்.

“சோதனையின்போது, தீக்காயங்களுடன் மாண்டுகிடந்த நிலையில் 11 பேரின் உடல்களை அதிகாரிகள் மீட்டனர். அந்த 11 பேரில் 5 பேர் பெரியவர்கள், ஆறு பேர் குழந்தைகள்,” என்று திரு ஹென்றி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்தக் குழந்தைகள் இரண்டு முதல் ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர்ப் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டபோதிலும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பற்றி எரிந்த அந்தத் தீ, குறைந்தது 40 கடைகளையும் வீடுகளையும் முற்றிலும் அழித்தது.

தீச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

“வீடுகளும் கடைகளும் மிகவும் நெருக்கமாக அமைந்திருந்ததும் கொழுந்துவிட்டு எரிந்த தீயும்தான் தீயை அணைக்கும் பணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதற்குக் காரணம்,” என்று திரு ஹென்றி தெரிவித்தார்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் தீச்சம்பவங்கள் இந்தோனீசியாவில் பொதுவாக நடப்பதுண்டு.

கடந்த டிசம்பர் மாதம், மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடி அலுவலகக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட கடும் தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாதீஉயிரிழப்பு