சோல்: தென்கொரியாவில் சிறிய நிறுவனங்களில் பணிபுரிந்த சில ஊழியர்கள் நியாயமற்ற காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
46 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை ‘வொர்க்பிளேஸ் கப்ஜில் 119’ எனும் மக்கள் நல அமைப்பு ஆராய்ந்தது
தங்கள் முதலாளிகள் தங்களை நியாயமற்ற வகையில் பணிநீக்கம் செய்ததாக அவர்களில் பெரும்பாலானோர் முறையிட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி நாடி வந்த ஊழியர்களை அமைப்பு ஆராய்ந்தது.
அவர்கள் ஐந்து பேருக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட வேலையிடங்களில் பணிபுரிந்தவர்கள்.
அவர்களில் 27 பேர் பணிநீக்கம் தொடர்பாக உதவி நாடியதாகத் தெரியவந்துள்ளது.
விநோதமான காரணங்களுக்காகச் சில ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு, சக ஊழியர்களுடன் அமர்ந்து உணவருந்தாமல் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்ததற்காக ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடைகளிலிருந்து உணவு வாங்காமல் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டு வந்து பணத்தை மிச்சப்படுத்த அந்த நபர் மேற்கொண்ட முயற்சியை அவரது மேல் அதிகாரிகள் ஏற்காமல் அவரைச் சாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமது முதலாளி தம்முடன் நெருங்கிய உறவு கொள்ளும் நோக்குடன் தம்மை அணுகியதாகவும் அவரது ஆசைக்கு இணங்காததால் தம்மை அவர் பணிநீக்கம் செய்ததாகவும் இன்னோர் ஊழியர் தெரிவித்ததாக அமைப்பு கூறியது.
வேலையின்போது கழுத்தில் காயம் ஏற்பட்டு மூன்று நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட ஊழியர் ஒருவருக்கு மூன்று நாள் சம்பளம் கழிக்கப்பட்டதாக அமைப்பு தெரிவித்தது.
அமைப்பு ஆராய்ந்த 46 பணிநீக்கங்களில் 38 பணிநீக்கங்கள், வேலையிடத் துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புடையவை என்று தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் நலன் தொடர்பாகவும் அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் தென்கொரியாவில் பல சட்டக்கூறுகள் உள்ளன.
ஆனால் ஐந்து ஊழியர்களுக்கும் குறைவானவர்களைக் கொண்ட சிறு நிறுவனங்கள் பெரும்பாலானவற்றுக்கு அவை பொருந்தாது என்று கூறப்படுகிறது.
ஊழியர்களைப் பாதுகாக்கும் சட்டம் சிறு நிறுவனங்களில் பணிபுரிவோரையும் பாதுகாக்க வேண்டும் என்று அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அப்போதுதான் வேலையிடத் துன்புறுத்தல், நியாயமற்ற பணிநீக்கங்கள் போன்றவற்றைத் தடுக்க முடியும் என்று அது வலியுறுத்தியது.