தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் நகரத்தில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது: அதிகாரிகள்

1 mins read
1ea2f938-45d5-4593-9fc4-54bba7635ee8
சுற்றுப்பயணிகள் அதிகம் நாடிச் செல்லும் ஜேஸ்பர் நகரத்தில் எரிந்துபோன கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் அருகே மக்கள் நின்றவாறு காணப்படுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

டொரோண்டோ: கனடிய சுற்றுப்பயண நகரமான ஜேஸ்பரில் காட்டுத்தீச் சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதில் முன்னேற்றம் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்பேர்ட்டாவின் மலைப்பகுதியான ஜேஸ்பர் தேசிய பூங்காவைப் பேரளவில் ஆக்கிரமித்து வரும் காட்டுத்தீயினால் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் நாசமாகிவிட்டது.

தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ள எஞ்சிய பகுதிகளில் நெருப்பு, நாள் இறுதிக்குள் அணைக்கப்படும் என்று கனடாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் அரசாங்க அமைப்பு ஜூலை 27ஆம் தேதி ‘எக்ஸ்’ தளத்தின் மூலம் தெரிவித்தது.

மின்சாரம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும், ஜேஸ்பர் தேசிய பூங்காவில் ‘கட்டுக்கடங்காத நிலை’ ஏற்பட்டுள்ளது என்றும் 100க்கும் அதிக ஆண்டுகளில் இதுவே ஆகப் பெரிய காட்டுத்தீச் சம்பவம் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.

ராக்கி மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவும் நகரமும் ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் மேலான சுற்றுப்பயணிகளை ஈர்த்து வருகின்றன.

இவற்றிலிருந்து மக்கள் ஜூலை 22ஆம் தேதி வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே, அல்பேர்ட்டாவில் 157 காட்டுத்தீச் சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக அண்மைய தரவுகள் கூறுகின்றன.

குளிர்ந்த, மழைக்கால வானிலை காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயலும் தீயணைப்பு வீரர்களுக்குத் தோதாக உள்ளது என்று அல்பேர்ட்டாவின் மாகாணக் காட்டுத்தீத் தகவல் அதிகாரி திருவாட்டி மெலிசா ஸ்டோரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்