புத்ராஜெயா: மலேசியாவில் பிரிட்டனின் ஆர்ம் லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் முதல் சில்லுகள், உலகளாவிய குறைகடத்தி விநியோகச் சங்கிலியில் 2030க்குள் தடம் பதிக்க அந்நாட்டு அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது.
ஆர்ம் லிமிடெட், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிக திறன் கொண்ட நுண்செயலி வடிவமைப்புத் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாகும்.
ஆப்ஸ்டார் டெக்னாலஜி, ஆல்பாஸ்விஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் உட்பட ஐந்து உள்நாட்டு நிறுவனங்கள் அச்சில்லுகளை வடிவமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமது நசிர் தெரிவித்தார்.
மேலும், நிறுவனங்கள் சில்லுகளின் முதல்நிலை வடிவமைப்பை 2028க்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகள் 2030ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
பொருளியல் அமைச்சின் மாதாந்தரக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அக்கூட்டம் நடைபெற்றது.
மலேசியாவிலேயே சிப்புகள் வடிவமைக்கப்படுவதோடு, அவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டுக் குறைகடத்தி விநியோகச் சங்கிலியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் அக்மால் குறிப்பிட்டார்.
அதனைச் செயல்படுத்தும் பொருட்டு, இரு உள்ளூர் நிறுவனங்களுக்கு ‘ஆர்ம்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சில்லுகளைத் தயாரிப்பதற்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை ஐந்து உள்ளூர் நிறுவனங்களுக்கு எட்டு ‘ஆர்ம்’ தொழில்நுட்பத்திற்கான அணுகல் தொகுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆளில்லா வானூர்தி, அதிநவீன நுண்மின்னணு போன்ற துறைகளில் உள்ளூர் நிறுவனங்களின் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்த மலேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உதவும்.
மேலும், திறனாளர்களை உருவாக்க நான்கு ஆண்டுகளில் 10,000 பேருக்கு ‘ஆர்ம்’ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் இதுவரை 1,530 பேர் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அக்மால் விவரித்தார்.
சில்லு வடிவமைப்புடன் நின்றுவிடாமல், உள்ளூர் உற்பத்தி, அதிக திறன் கொண்ட மலேசியப் பொறியாளர்களின் உருவாக்கத்திற்கும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என மலேசியா நம்புகிறது.


