கோலாலம்பூர்: மலேசிய உள்நாட்டு கார் தயாரிப்பாளரான பெரோடுவா, அதன் முதல் மின்வாகனத்தை திங்கட்கிழமை (நவம்பர் 1) அறிமுகப்படுத்தியுள்ளது. நீடித்து நிலைத்துநிற்கக் கூடிய மின்வாகனச் சூழலை மேம்படுத்தும் திட்டத்தின் அங்கமாக மின்கலன்களைக்கொண்டு இயங்கும் இந்த QV-E வகை கார் விற்பனைக்கு வந்துள்ளது.
அதன் ஆரம்பவிலை மின்கலனையும் காப்புறுதியையும் தவிர்த்து RM80,000 (S$25,100) என்று பெர்னாமா ஊடகம் தெரிவித்துள்ளது. வாகனத்தை அறிமுகப்படுத்தும் விழாவில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்டு பேசினார்.
“நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இந்த நிகழ்வு ஒரு மின்வாகனத்தின் அறிமுகம் மட்டுமல்ல. நம் உள்ளூர் திறனார்களின் அறிவு, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை ஒன்றிணைந்து இதனை வழங்கியுள்ளது என்பதே தனித்துவமானது,” என்றார்.
குறுகிய காலத்தில் திட்டம் வளர்ந்துள்ளதும் தமது உள்ளத்தைத் தொட்டுவிட்டதாக பிரதமர் பாராட்டினார். ‘லித்தியம்’ வகை மின்னூட்டிகளைப் பயன்படுத்தும் QV-E வகை பெரோடுவா மின்வாகனம், மின்னூட்டு முழுமையாகச் செய்யப்பட்டால் 445 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. சாலைகளின் தன்மை, வானிலை, தட்பவெப்பம், ஓட்டுநரின் பாவனை போன்றவற்றைப் பொறுத்து அது அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கார் கொண்டுள்ளது. பின் இருக்கையில் அமர்வோர் மூச்சு விடுவதை அறிவது உள்பட குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் இருப்பதை ஓட்டுநருக்கு உணர்த்துவது போன்ற சிறப்புக் கருவிகள் வாகனத்தில் உள்ளன.


