துபாய்: தங்களின் முதல் பறக்கும் டாக்சி நிலையத்தைக் கட்டிமுடித்திருப்பதாக துபாய் தெரிவித்துள்ளது.
நிலையத்தில் சேவைகள் இவ்வாண்டிறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். துபாய் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் முகம்மது, நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டதாக துபாய் ஊடக அலுவலகம் அறிக்கை மூலம் குறிப்பிட்டது.
‘உலகில் முதல்முறை’
உலகளவில் இத்தகைய நிலையம் கட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று துபாய் அதிகாரிகள் வகைப்படுத்துகின்றனர்.
நிலையத்தில் நான்கு தளங்கள் இருக்கின்றன. அதன் மொத்த பரப்பளவு 3,100 சதுர மீட்டராகும்.
நிலையத்தில் இரு-தள வாகன நிறுத்துமிடம், பறக்கும் டாக்சிகள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்குமான தளங்கள் ஆகியவை இருக்கின்றன. பறக்கும் டாக்சிகளுக்கு மின்னூட்டம் செய்வதற்கான கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பறக்கும் டாக்சி நிலையம், துபாயின் அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இது, பறக்கும் டாக்சிகளுக்கான மையமாக விளங்கும் என்றும் இங்கு ஆண்டுதோறும் 170,000 பயணிகள் வரை கையாள முடியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பறக்கும் டாக்சி நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்
பறக்கும் டாக்சிகளை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் செயல்படும் ஜோபி ஏவியேஷன் நிறுவனம் இயக்கும். ஆறு ஆண்டுகளுக்கு பறக்கும் டாக்சி சேவைகளை வழங்க அந்நிறுவனத்துக்குப் பிரத்யேக உரிமை உள்ளது.

