சிட்னி: ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக அந்நாட்டின் பாலூட்டி வகை விலங்கு ஒன்றுக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சல் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நீண்ட மூக்கைக் கொண்ட ஒருவகை நீர்நாய் அக்கிருமித்தொற்றுக்கு உள்ளானதை ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) உறுதிப்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் எச்5என்1 கிருமி ஆஸ்திரேலியாவில் பரவத் தொடங்கியது. அதிலிருந்து அந்தக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அந்நாட்டில் அதிகரித்துவருகின்றன.
பீச்போர்ட் எனும் கடற்கரை நகரில் எச்5என்1 கிருமித்தொற்றுக்கு உள்ளான நீர்நாய் மாண்டுகிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்நகரம், தெற்கு ஆஸ்திரேலியத் தலைநகரான அடிலெய்டுக்குத் தெற்கே கிட்டத்தட்ட 310 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கிட்டத்தட்ட 100,000 நீர்நாய்கள் உள்ளன. அவற்றில் மாண்டுகிடந்த நீர்நாயும் அடங்கும்.
அதற்குக் காயம் ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் மரணத்துக்கும் நோய்வாய்ப்பட்ட அல்லது உயிரிழந்த மற்ற கடல்வாழ் பாலூட்டிகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று ஆஸ்திரேலிய வேளாண் அமைச்சர் ஜூலி கோலின்ஸ் தொலைக்காட்சிவழி தெரிவித்தார்.
“எச்5 வகை பறவைக் காய்ச்சல் இயற்கைச் சூழலில் பரவும்போது குறிப்பிடத்தக்க அளவில் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது,” என்றும் அவர் சொன்னார்.


