புத்ராஜெயா: நாடு முழுவதும் உள்ள 155 இந்துக் கோவில்களுக்கு பயனளிக்கும் ‘தர்மா மடானி’ திட்டத்தின் முதல் கட்டத்திற்காக மடானி அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) 3.1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
“சமய நடவடிக்கைகள், கற்றல், ஆன்மீகம், கலாசாரம், சமுதாய மேம்பாட்டிற்கான சமூக மையங்களாக வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியே தர்மா மடானி,” என்று மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் தெரிவித்தார்.
“சமூகத்தை ஒன்றிணைப்பதற்கும், நேர்மறையான மதிப்பினை வளர்ப்பதற்கும், அடிமட்ட சமூக ஆதரவுக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த சமூக மையங்கள் தலங்களாகச் செயல்படும்,” என்று அவர், ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெற்ற கெசுமா தர்மா மடானி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒப்படைப்பு விழாவில் கூறினார்.
நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட 1,000 இந்துக் கோவில்களை ஈடுபடுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் இதற்காக மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திரு ரமணன் மேலும் கூறினார்.
தகுதியுள்ள ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திற்கும் 20,000 ரிங்கிட் நிதி உதவி ஒருமுறை வழங்கப்படும்.
பதிவு தொடங்கியதிலிருந்து, 915 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும், அவை தற்போது மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவால் (மித்ரா) நிர்வாகத் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளின்படி மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
“மீதமுள்ள விண்ணப்பங்கள் அடுத்தடுத்து பரிசீலிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கப்படும்.
“கோயில் தலைவர்களும் நிர்வாகப் பிரதிநிதிகளும் ஒதுக்கப்பட்ட நிதியைப் பொறுப்புடன் பயன்படுத்துவார்கள். நல்லாட்சிக் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள். மேலும் உள்ளூர் இந்தியச் சமூகத்தினர் நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வார்கள்,” என்று திரு ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அங்கீகரிக்கப்பட்ட நோக்கம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, துல்லியமான, முழுமையான செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்து, கோயில் நிர்வாகிகள் சமூகத் திட்டங்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் அன்வார் இப்ராகிம், நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட 1,000 இந்துக் கோவில்களுக்கு ஒரே நேரத்தில் 20 மில்லியன் ரிங்கிட் உதவி வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியாக ‘தர்மா மடானி’ திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டம் ‘மித்ரா’ மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

