தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 28ஆம் தேதி மியன்மாரில் முதற்கட்ட பொதுத் தேர்தல்

2 mins read
2d84456d-2c2b-4e44-a7b3-7836d80b9f05
மியன்மார் அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிசம்பரிலும் ஜனவரியிலும் கட்டங்கட்டமாகப் பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரின் முதற்கட்ட பொதுத் தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அரசாங்கத் தொலைக்காட்சியான எம்ஆர்டிவி திங்கட்கிழமை ஆகஸ்ட் 18ஆம் தேதி தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாகப் போரால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் முதல் பொதுத் தேர்தல் எப்படி நடைபெறும் என்பதை எம்ஆர்டிவி எடுத்துக்கூறியது.

பொதுத் தேர்தலின் அடுத்தடுத்த கட்டங்கள் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மியன்மாரின் யூனியன் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக டிசம்பரிலும் ஜனவரியிலும் தேர்தலைக் கட்டங்கட்டமாக நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அமைதிக்கான நோபெல் விருது வென்ற அங் சான் சூச்சி வழிநடத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மியன்மார் ராணுவம் 2021ஆம் ஆண்டு கவிழ்த்ததை அடுத்து மியன்மாரில் வன்முறை தொடர்கிறது.

பொதுத் தேர்தலில் பங்கேற்க மொத்தம் 55 அரசியல் கட்சிகள் பதிவுசெய்துள்ளன. அவற்றுள் 9 கட்சிகள் தேசிய அளவில் போட்டியிட முடிவெடுத்துள்ளன என்று எம்ஆர்டிவி குறிப்பிட்டது.

ஒப்புதல் பெற்று பதிவு செய்யப்படுவதற்கு முன் ஆறு கட்சிகள் மறுஆய்வு செய்யப்படுவதாக ‘த குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ நாளேடு இம்மாதத் தொடக்கத்தில் சொன்னது.

புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம், நாடளவில் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வாக்களிப்பை நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. ராணுவத்தை எதிர்க்கும் ஆயுதமேந்தியக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களும் அவற்றுள் அடங்கும் என்று நாளேடு சொன்னது.

2024ஆம் ஆண்டு ராணுவ ஆதரவுபெற்ற அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை உருவாக்க நாடளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினர். ஆனால், 330 பகுதிகள் உள்ள மியன்மாரில் அவர்களால் 145 இடங்களில் மட்டும் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடிந்தது.

குறிப்புச் சொற்கள்