மலேசியாவில் சிறையிலிருந்தபோது முனைவர் பட்டம் வாங்கிய முதல் கைதி

மலேசியாவில் சிறையிலிருந்தபோது முனைவர் பட்டம் வாங்கிய முதல் கைதி

1 mins read
2c358661-aa6a-4b13-a791-04339738e6de
முன்னாள் கைதி மாலிக் யாதம் (வலது), மலேசியாவில் சிறையிலிருந்தபோது முனைவர் பட்டம் வாங்கிய முதலாமவர். செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை அவர் பெற்றார். - படம்: சிலாங்கூர் சுல்தான் அலுவலகம்/ஃபேஸ்புக்

ஷா ஆலம்: மலேசியாவில் சிறையிலிருந்தபோது முனைவர் பட்டம் வாங்கிய முன்னாள் கைதி மாலிக் யாதம், 39, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3), சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்நாட்டில் சிறையிலிருக்கும்போது கைதி ஒருவர் முனைவர் பட்டம் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.

சுல்தான், மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் கைதி ஒருவரைச் சந்திப்பதும் இதுவே முதல் முறை.

முன்னதாக, மரண தண்டனை விதிக்கப்பட இயலாத இளங்குற்றவாளிகள் சுல்தானின் ஆணைக்கு இணங்க காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்படும் நடைமுறைக்கு (Tahanan Limpah Sultan - TLS) இணங்க மாலிக் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, மாலிக் விடுவிக்கப்பட்டார்.

2001ஆம் ஆண்டு தனது 14ஆம் வயதில் தண்டனையை நிறைவேற்றத் தொடங்கிய அவர், காஜாங் சிறைச்சாலையில் இருந்தபடியே கல்வியைத் தொடர்ந்தார். வணிக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டத்தையும் அவர் பெற்றார்.

சந்திப்பின்போது, விடுதலைக்குப் பிறகான வாழ்க்கை குறித்து மாலிக்கிடம் கேட்ட சுல்தான், மாலிக்கின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மாலிக்கின் கல்விப் பயணம் குறித்து அறிந்ததும் நெகிழ்ந்ததுடன் அவருக்கு வாழ்வில் இரண்டாவது வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று சுல்தான் கருதியதாகக் கூறப்பட்டது.

குடும்பத்தின் நற்பெயரைக் கட்டிக்காக்கும்படி மாலிக்கிடம் அறிவுறுத்திய சுல்தான், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் உறுதியாக இருக்கும்படியும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்