தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1967க்குப் பிறகு முதன்முறையாக ரஷ்யாவிற்கு மலேசிய மாமன்னர் பயணம்

1 mins read
ரஷ்ய அதிபர் மாளிகையில் புட்டினுடன் சந்திப்பு
9fa948a1-f4f9-43e6-a33a-234ef31e57a2
ஆகஸ்ட் 6ஆம் தேதி, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் சுவரில் அமைந்துள்ள பெயர் தெரியாத வீரரின் கல்லறையில், மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் (வலது) மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். - படம்: இபிஏ

உலகளாவிய கூட்டணிகள் மாறிவரும் சூழலில் ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில், புதன்கிழமை (ஆகஸ்ட் 6) ரஷ்ய அதிபர் மாளிகையில் அதிபர் விளாடிமிர் புட்டினை மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் சந்தித்தார்.

சோவியத் ஒன்றியத்துடன் 1967ல் அரசதந்திர உறவுகள் அமைக்கப்பட்ட பிறகு, மலேசிய மாமன்னர் ஒருவர் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரேன்மீது ரஷ்யாவின் படையெடுப்புக்காக மாஸ்கோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்காவும் பிற முக்கிய ஜனநாயக நாடுகளும் அறைகூவல் விடுத்துள்ள போதிலும், ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வலுவடைந்துவரும் உறவை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது.

2022ல் மலேசியப் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு அன்வார் இப்ராகிம், இருமுறை ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் மலேசியாவை உறுப்பு நாடாகச் சேர்க்க அவர் முயற்சி செய்து வருகிறார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய அரண்மனையின் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 5 முதல் 10 வரை மலேசிய மாமன்னரின் ஆறு நாள் பயணமானது வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலித் நோர்டினும் அவருடன் சென்றுள்ளார்.

சிங்கப்பூர், சீனா, புருணை ஆகிய நாடுகளுக்குப் பிறகு, மாமன்னர் மேற்கொள்ளும் நான்காவது அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

குறிப்புச் சொற்கள்