லிமா: பசிபிக் பெருங்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது காணாமல் போன ஆடவர், 95 நாள்களுக்குப்பின் மீண்டும் வீடு திரும்பிய அதிசயம் தென்னமெரிக்க நாடான பெருவில் நிகழ்ந்துள்ளது.
அவர் கரப்பான்பூச்சிகள், பறவைகள், கடல் ஆமைகள் ஆகியவற்றை உண்டு உயிர்வாழ்ந்ததாகக் கூறப்பட்டது.
மேக்சிமோ நாப்பா, 61, எனும் இந்த மீனவர், கடந்த 2024 டிசம்பர் 7ஆம் தேதி பெருவின் தென்கடலோரப் பகுதியில் உள்ள மர்க்கோனாவிலிருந்து மீன்பிடிக்கக் கிளம்பினார்.
இரு வாரங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் சென்றார் மேக்சிமோ. ஆனால், பத்து நாள்களுக்குப்பின் கடுமையான காற்றால் அவரது படகு தூக்கிவீசப்பட, அவர் கடலில் தத்தளித்தார்.
குறித்த காலத்தில் வீடு திரும்பாததால் மேக்சிமோவின் குடும்பத்தினர் அவரைத் தேடும் பணியில் இறங்கினர். பெரு நாட்டின் கடல்துறை சுற்றுக்காவல் படையினரும் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், எக்வடோர் நாட்டின் மீன்வளத்துறைச் சுற்றுப்படகு ஒன்று மார்ச் 12ஆம் தேதி மேக்சிமோவைக் கண்டுபிடித்தது. அவர் கடலோரத்திலிருந்து 1,094 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் உடலில் நீர்ச்சத்து குறைந்து, கவலைக்கிடமான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
எக்வடோர் எல்லைப் பகுதியில் உள்ள பைத்தா நகரில் தம் சகோதரருடன் இணைந்தார் மேக்சிமோ.
“நான் இறக்க விரும்பவில்லை. கரப்பான்பூச்சிகள், பறவைகளைச் சாப்பிட்டேன். கடைசியாக நான் உண்டது கடல் ஆமைகளை!” என்று அவர் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடைசி 15 நாள்களாக தான் எதையும் உண்ணவில்லை என்ற மேக்சிமோ, ஒவ்வொரு நாளும் தன் தாயாரை நினைத்ததாகவும் உயிர் பிழைத்ததற்காகக் கடவுளுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தலைநகர் லிமாவிற்குச் செல்லுமுன் பைத்தாவில் அவர் மேலும் பல மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.