பிரிக்ஃபீல்ட்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

2 mins read
3235e359-4cfc-403f-8a92-e4efcd565b4a
ஜூன் 13, 2025 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சி. - படம்: ஃபேஸ்புக்/Efi Eidzya

கோலாலம்பூர்: மலேசியாவில் துப்பாக்கி தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வரும் நிலையில், கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டு, இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

“ஜூன் 16 அன்று கோலாலம்பூரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் காவல்துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்,” என்று கோலாலம்பூர் துணை காவல்துறைத் தலைவர் முகமது உசுஃப் ஜான் முகமது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஜூன் 13 ஆம் தேதி இரவு, பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏழு பேர் கொண்ட குழுவை இரண்டு துப்பாக்கிக்காரர்கள் தாக்கினர். இதில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நான்கு நாள்களுக்குப் பிறகு, செராஸ் கடைத்தொகுதிக்கு வெளியே மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் இரண்டு ஆடவர்கள் மாண்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பலர், சம்பவ இடத்திலிருந்து ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றதாக பெரித்தா ஹரியான் நாளிதழ் தெரிவித்தது.

செராஸ் மற்றும் பிரிக்ஃபீல்ட்சில் நடந்த இரண்டு சம்பவங்களும் ரகசிய கும்பல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதாக நம்பப்படும் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாக ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் துணை காவல்துறைத் தலைவர் கூறினார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் சம்பவம் தொடர்பாக மொத்தம் 18 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், செராசில் நடந்த துப்பாக்கிச் சூடு விசாரணைக்கு உதவ 20 பேர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் முகமது உசோஃப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்