ஜோகூர் பாருவில் ஆண்களிடம் கொள்ளை: ஐவர் கைது

ஜோகூர் பாருவில் ஆண்களிடம் கொள்ளை: ஐவர் கைது

படம்: பெரித்தா ஹரியான்

14 Jun 2026 - 5:50 pm

2 mins read

ஜோகூர் பாரு: மலேசியாவில் சமூக ஊடகச் செயலிவழி சந்தித்தவர்களிடம் இருந்து கொள்ளையடித்ததாக நம்பப்படும் ஆடவர் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒரு கும்பலாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘கிரைண்டர்’ என்ற செயலியில் போலிக் கணக்குகள்வழி பிற ஆண்களை ஆடவர் ஐவரும் சந்தித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் குறைந்தது ஒன்பது பேரிடம் கைரிசை காட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதானவர்கள் 21லிருந்து 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஏ.பி. ரஹமான் அர்ஷத், ஒவ்வோர் ஆடவரும் செயலிவழி சந்திக்கும் ஆண்களைக் காருக்குள் அழைத்துச் செல்வது வழக்கம் என்றார்.

பின், கும்பலைச் சேர்ந்த வேறோர் ஆடவர் பாதுகாவல் அதிகாரியைப் போல தம்மைக் காட்டிக்கொண்டு, காருக்குள் இருந்தவர்கள் பொது இடத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குறைகூறுவார்.

“அந்தக் கும்பல், ஆண்களை மிரட்டியும் தாக்கியும் அவர்களிடமிருந்து கடன் அட்டைகள், ரொக்க அட்டைகள், பணம், நகை ஆகியவற்றைப் பறித்தது,” என்று திரு ரஹமான் விளக்கம் அளித்தார்.

சம்பவம் தொடர்பில் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் காவல்துறையிடம் ஏறக்குறைய 25லிருந்து 40 புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பெலாங்கி, கம்போங் மலாயு மஜிடீ ஆகிய வட்டாரங்களில் நேர்ந்த கொள்ளைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் கிட்டத்தட்ட 315,220 ரிங்கிட்டைப் பறிகொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் கும்பல் இருந்த இடத்தைக் கண்டுபிடித்த ஜோகூர் பாரு மேற்கு வட்டார காவல்நிலையத் தலைமையக அதிகாரிகள், மே 30ஆம் தேதி, காலை 11.30 மணியளவில் கெமருன் ஹைலெண்ட்சில் அவர்களைக் கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து ஐந்து கைப்பேசிகள், ஒரு கார், தங்கம் வாங்கியதற்கான ரசீதுகள், ஐந்து கடன் அட்டைகள், தங்கச் சங்கிலிகள், காதணிகள், மோதிரங்கள், கைக்காப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூன் 15) ஆடவர் ஐவர்மீதும் குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள்மீது இதற்குமுன் கொள்ளைக் குற்றமும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்