சிக்காகோ: அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று வாகனங்கள்மீது மோதியதால் ஐவர் உயிரிழந்தனர்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) பிற்பகல் 2 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2 மணி) அச்சம்பவம் நிகழ்ந்தது.
‘அமேசான் பிரைம் ஏர் 7598’ என்னும் அந்தச் சரக்கு விமானம் தரையிறங்கியபோது, திடீரென ஓடுபாதையைத் தாண்டிச் சென்று, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள்மீது மோதியதாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் கூறினர்.
அந்தச் சம்பவத்தை அமேசான் நிறுவனமும் மயாமி-டேட் விமானப் போக்குவரத்துத் துறையும் உறுதிப்படுத்தின.
அந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று மயாமி-டேட் தீயணைப்புத் துறைத் தலைவர் ரே ஜடல்லா கூறினார்.
விமானம் மோதிய வாகனங்களில் இருந்த இருவரும் விபத்தில் சிக்கினர்.
அதேபோல விமானியும் துணை விமானியும் விமானத்திற்குள் சிக்கிக்கொண்டனர் என்றும் ஜடல்லா கூறினார்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் அடையாளங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
60க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்களும் 200 பணியாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக மயாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்து தொடர்ந்து எரிபொருள் கசிந்துகொண்டிருந்ததால், அவசரகாலப் பணியாளர்கள் அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஜடல்லா தெரிவித்தார்.
விபத்து நடந்த உடனேயே விமான நிலையம் அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்தி வைத்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அதன் நான்கு ஓடுபாதைகளில் இரண்டு மீண்டும் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை அமேசான் நிறுவனம் தொடர்ந்து சேகரித்து வருவதாக அதன் பேச்சாளர் கெல்லி நான்டெல் தெரிவித்தார்.
“உண்மையில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் நாங்கள் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்று என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


