நியூயார்க்: ஐம்பத்துக்கும் மேற்பட்டோருடன் நியூயார்க் விரைவுச்சாலையில் சென்ற சுற்றுலாப் பேருந்து திடீரெனக் கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழந்ததாகவும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று நியூயார்க் மாநிலக் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து நியூயார்க் நகரை நோக்கிச் சென்றுகொண்டு இருந்த வழியில், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து உருண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்துப் பகுதிக்கு அருகே சூழ்ந்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய அந்த அதிகாரி, பேருந்தில் இருந்த சுற்றுப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியா, சீனா, பிலிப்பீன்ஸ் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றார்.
விபத்து குறித்து விசாரணை நடத்த தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பேருந்து தடுமாறி உருண்டபோது பயணிகள் பலர் தூக்கி எறியப்பட்டனர். உருண்டு சென்று சாலை ஓரப் பள்ளத்தில் விழுந்த பேருந்துக்கு அடியில் சிலர் சிக்கிக்கொண்டனர். மீட்புக் கருவிகளின் உதவியோடு அவர்கள் காயங்களுடன் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
படுவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததாகப் பேச்சாளர் கூறினார். இருப்பினும், ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

