கோலாலம்பூர்: ஆர்எக்ஸ்ஸீ மெம்பர்ஸ் 8.0 (RXZ Members 8.0) எனப்படும் ஒன்றுகூடல் தொடர்பான சாலை விபத்துகளில் ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான அந்நிகழ்வு திரங்கானு மாநிலத்தில் நடைபெற்றது. சென்ற ஆண்டு அந்நிகழ்வின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு எண்ணிக்கை கிட்டத்தட்ட மும்மடங்கானது.
சாலை விபத்து எண்ணிக்கை
இவ்வாண்டின் ஒன்றுகூடலில் 29 விபத்துகள் நிகழ்ந்தன. சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 11ஆக இருந்ததென ஹரியான் மெட்ரோ ஊடகம் தெரிவித்தது.
இவ்வாண்டின் ஆர்எக்ஸ்ஸீ மெம்பர்ஸ் 8.0 ஒன்றுகூடலில் உயிர்ப் பலி ஏற்படுத்திய ஐந்து சாலை விபத்துகள் நிகழ்ந்தன. சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை இரண்டாக இருந்தது என்று திரங்கானு காவல்துறைத் தலைவர் முகம்மது கைரி கைருதீன் கூறினார்.
இவ்வாண்டு மாண்டவர்களில் நால்வர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் அவர் சொன்னார். அவர்கள் 20லிருந்து 48 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆர்எக்ஸ்ஸீ மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் கோலா திரங்கானுவிலும் கெமாமானிலும் நிகழ்ந்தன. கெமாமானிலும் டுங்குனிலும் நிகழ்ந்த இதர மூன்று சம்பவங்கள் மற்ற வகை மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டவை,” என்று அவர் திரங்கானு காவல்துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
யமஹா ஆர்எக்ஸ்-ஸீ பிரியர்களுக்கான ஒன்றுகூடல்
ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த ஒன்றுகூடல் யமஹா ஆர்எக்ஸ்-ஸீ மோட்டார் சைக்கிளை வைத்திருப்போர், அதனை விரும்புவோருக்கானது. அந்த மோட்டார் சைக்கிள் மலேசியாவில் மிகவும் பிரபலமாக இருந்துவருகிறது.
இவ்வாண்டின் ஆர்எக்ஸ்ஸீ ஒன்றுகூடல் அதன் எட்டாவது ஒன்றுகூடலாகும். அது, கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை திரங்கானுவின் கோலா நெருஸ் மாவட்டத்தில் உள்ள கோங் பாடாக்கில் இருக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயத் திடலில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பல்வேறு குற்றங்களுக்காகக் காவல்துறை 1,850 அழைப்பாணைகளை வழங்கியதுடன் 222 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தது. சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன்கீழ் அந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக திரு கைரி குறிப்பிட்டார்.

