குளுவாங்: ஜோகூரின் குளுவாங் வட்டார விரைவுச்சாலையில் இரவு நேரத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்தனர்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (மார்ச் 27) இரவு 11.30 மணியளவில் மூன்று கார்களும் லாரி ஒன்றும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
லாரியின் முன்புற டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் பஹ்ரின் முஹம்மது நோ தெரிவித்தார்.
தாறுமாறாக ஓடிய லாரி, முதலில் கார் ஒன்றின் மீது மோதியது. பின்னர் எதிர்த்தடத்தை நோக்கிப் பாய்ந்த லாரி சென்றுகொண்டு இருந்த இரண்டு கார்கள் மீது மோதியது.
லாரி மோதிய வேகத்தில் ஒரு கார் தீப்பற்றி எரிந்தது. இருப்பினும், காருக்குள் இருந்த அனைவரும் வேகமாக வெளியேற்றப்பட்டனர். அந்த கார் முற்றாக எரிந்து எலும்புக்கூடு போல ஆனது.
அதேநேரம், மற்றொரு காரின் ஓட்டுநரும் அதனுள் இருந்த ஒரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்னொரு காரில் இருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தையும் விபத்தில் மாண்டது. அந்தக் குழந்தையின் பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
குழந்தையின் மூன்று சகோதர, சகோதரிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தக் குழந்தைகள் நான்கு வயதுக்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் என்றார் திரு பஹ்ரின்.
தொடர்புடைய செய்திகள்
35 வயது லாரி ஓட்டுநரின் காலிலும் இடுப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டார். மரணம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான முறையிலும் கண்மூடித்தனமாகவும் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக திரு பஹ்ரின் தெரிவித்தார்.