பாலித் தீவில் மின்தூக்கி விழுந்து ஐவர் உயிரிழப்பு

பாலித் தீவில் மின்தூக்கி விழுந்து ஐவர் உயிரிழப்பு

1 mins read
d0e10b0d-600d-44d0-b44d-cd96b8debb85
படம்: - தமிழ் முரசு

பாலி: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்தோனீசியாவின் பாலித் தீவில் கம்பிவடம் அறுந்து மின்தூக்கி விழுந்ததில் அதனுள் இருந்த ஐவர் உயிரிழந்தனர்.

பாலியின் உபுத் வட்டாரத்தில் உள்ள அயுத்தேரா எனும் உல்லாச விடுதியில் திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்தன.

மாண்ட ஐவரும் அந்த உல்லாச விடுதியின் ஊழியர்கள். அவர்களில் இருவர் ஆண்கள், மூவர் பெண்கள். அவர்கள் 19 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

வெளிப்புறத்தில் இருந்த அந்த மின்தூக்கி 60 டிகிரி சாய்நிலையில் செயல்பட்டு வந்தது.

கண்ணாடியால் மூடப்பட்ட அம்மின்தூக்கியை இணைத்திருந்த எஃகுவடம் அறுந்துபோக, மின்தூக்கி 100 அடி பள்ளத்தில் விழுந்ததாக ‘ஜகார்த்தா போஸ்ட்’ செய்தி குறிப்பிட்டது.

நிகழ்விடத்திலேயே இருவரும் மருத்துவமனையில் மூவரும் மாண்டதாக அச்செய்தி தெரிவித்தது.

மின்தூக்கி விழுந்த வேகத்தில் அந்த ஐவரில் ஒருவர் அருகிலிருந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டதாக ‘பாலி டிஸ்கவரி’ செய்தி கூறியது.

போதிய பராமரிப்பின்மையாலும் கவனக்குறைவாலும் மின்தூக்கி விழுந்ததா என்று உபுத் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அளவிற்கு அதிகமாக ஆள்கள் ஏறியதால் மின்தூக்கியின் எஃகுவடம் அறுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை முடிவுகள் காட்டுவதாக ‘ஜகார்த்தா போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மாண்ட தம் ஊழியர்களின் குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்த விடுதி உரிமையாளர், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்